3140. பக்குவத்தால் உயர்வாழைப் பழங்கனிந்தாற் போலும்
பரங்கருணை யாற்கனிந்த பத்தர்சித்தந் தனிலே
பொக்கமிலஅப் பழந்தனிலே தெள்ளமுதங் கந்தாற்
போற்கல்ந்து தித்திக்கும் பொன்னடிகள் வருந்த
மிக்கஇருள் இரவினிடை நடந்தெளியேன் இருக்கும்
வியன்மனையில் அடைந்துகத வந்திறக்கப் புரிந்து
ஒக்க எனை அழைத்தொன்று கொடுத்திங்கே இருஎன்
றுரைத்தனைஎம் பெருமான்நின் உயர்கருணை வியப்பே.
உரை: எம்பெருமானே, உயர்ந்த இனத்து வாழைப்பழம் பக்குவத்திற் கனிந்தது போல, மேலான கருணை நிறைந்து அன்பர்களின் சிந்தையிற் கனிந்து, குற்றமில்லாத அப்பழத்தில் தெளிந்த அமுதம் கலந்தது போலக் கலந்து தித்திக்கும் அழகிய திருவடிகள் வருந்துமாறு இரவுக் காலத்தில் மண் பொருந்தி நடந்து, எளியனாகிய யான் இருக்கின்ற பெரிய வீட்டுக்குப் போந்து கதவைத் திறக்கச் செய்து மனம் உவக்குமாறு என்னை முன்புற அழைத்து, ஒன்றை என்னிடம் தந்து, “இங்கே இருப்பாயாக” என உரைத்தருளினாய்; உனது திருவருள் எனக்கு வியப்பையே தருகிறது, காண். எ.று.
உயர்ந்த இனத்து வாழை தானே பழுக்கினும் உண்ணும் பக்குவத்துக்கு ஒப்பக் கனிதல் சிறப்பாதலால், “பக்குவத்தாற் பழம் கனிந்தாற் போலும்” என்று புகல்கின்றார். வாழையில்” உயர்ந்தது தாழ்ந்தது மென வேறுபாடுண்மை பற்றி, “உயர் வாழை” எனச் சிறப்பிக்கின்றார். உயர் வாழையின் கனியில் தேன் கலப்பது போல, அன்பர்களின் சிந்தையில் கருணை நிறைந்து சிவஞானம் கலந்து, கனியுடன் அமுதம் கலந்தது போல இனிக்கும் திறம் புலப்படுத்தற்கு, “கருணையாற் கனிந்த பத்தர் சித்தந் தனிலே கலந்து தித்திக்கும் பொன்னடிகள்” எனப் புகல்கின்றார். திருவடிக் கலப்பு, தெள்ளமுதக்கலப்புப், போல்கிற தென்பதாம். யாரும் இனிது வழங்கலாகாத, நள்ளிரவில் பரவும் பேரிருளை, “மிக்க இருளிரவு” என்று விளம்புகின்றார். வியன்-மனை, பெரிய வீடு. ஒத்த அன்புடன் மனம் அழைப்புக்கு இனிது இசைய அழைத்தமை விளங்க, “ஒக்க எனையழைத்து” எனவுரைக்கின்றார். இவ்விடத்தினின்று நீங்குதலின்றி இருப்பாயாக என்பாராய், “இங்கே இரு என்றுரைத்தனை” என மொழிகின்றார்.
இதனால், இறைவன் திருவடிகள் பத்தர் சித்தத்தில் இனிக்கின்ற திறம் விளக்கியவாறாம். (81)
|