3141. உளவறிந்தோர் தமக்கெல்லாம் உபநிடதப் பொருளாய்
உளவறியார்க் கிகபரமும் உறுவிக்கும் பொருளாய்
அளவறிந்த அறிவாலே அறிந்திடநின் றாடும்
அடிமலர்கள் வருந்தியிட நடந்திரவில் அடைந்து
களவறிந்தேன் தனைக்கூவிக் கதவுதிறப் பித்துக்
கையில்ஒன்று கொடுத்தாய்நின் கருணையைஎன் என்பேன்
விளவெறிந்தோன் அயன்முதலோர் பணிந்தேத்தப் பொதுவில்
விளங்குநடம் புரிகின்ற துளங்கொளிமா மணியே.
உரை: கன்றால் விளா மரத்தினை யெறிந்த திருமால், நான்முகன் முதலோர் வணங்கி வழிபடத் தில்லையம்பலத்தில் திருக்கூத் தியற்றும் விளங்குகின்ற ஒளி பொருந்திய பெரிய மாணிக்கமே, வீட்டு நெறியறிந்தார்க்கு உபநிடதங்கள் ஓதும் பிரமப் பொருளாய், அந்நெறி யறியாது உலகியல் வாழ்வையே கருதுவார்க்கு, இம்மை மறுமைகளை யெய்துவிக்கும் பொருளாய், அளவை யறிவால் அறிய அம்பலத்தில் நின்றாடும் நின் அடியிணை மலர்கள் மண்ணிற் பொருந்தி வருந்துமாறு நடந்து, இரவில் வந்து, கள்ளமுடைய என்னை நின்னருகேயழைத்துக் கதவினைத் திறக்கச் செய்து, என் கையில் ஒன்று கொடுத் தருளினாய்; பெருமானே, நின் பெருங் கருணைத் திறத்தை என்னென்பேன்! எ.று.
தான் கண்ணனாய், ஆயர் சேரியில் வளர்ந்த பொழுது, கஞ்சன் விடுப்பப் போந்த அசுரன் ஒருவன், விளா மரத்தின் உருவில் நின்றானாக, வேறு சில துணை யசுரர்கள் கன்றுருவில் தோன்றி, உண்மைக் கன்றுகளோடு கூடியிருந்தார்களாக, அக்கன்றுகளாகிய அசுரர்களைக் கொண்டு, விளா மரவடிவில் நின்ற அசுரனைத் தாக்கி இருதிறத்தாரையும் ஒருங்குகொன்றழித்த திருமாலின் அருட் செயலை நினைக்கின்றாராதலின், “விளவெறிந்தோன்” எனக் குறிக்கன்றார். பொது-தில்லையம்பலம். ஒளியினிடத்தே இடையாறா இமைப்புண்மை பற்றித் “துளங்கொளி” எனச் சொல்லுகின்றார். உளவு-நெறி உபாயம் என்றும் கூறுவர். உபநிடதங்கள் பிரமப் பொருளை முடிபாகக் கூறுவதால், “உபநிடதப் பொருளாய்” என வுரைக்கின்றார். அந்த உளவைக் கருதாமல், உலகியல் வாழ்வையே பொருளாக எண்ணி, அதனை அறநெறியில் கடை போக ஆற்றுபவர், தெய்வ வாழ்வு பெறலாம் என்ற குறிக்கோளுடையராதலின், அவர்கள் கருத்தும் விளங்க, “உளவறியார்க்கு இகபரமும் உறுவிக்கும் பொருளாய்” என ஒதுகின்றார். இவர்களை வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்
(குறள்) எனத் திருவள்ளுவர் குறிக்கின்றார். அளவறிதல் எனபது, காண்டல், கருதல், உரை யென்ற அளவைகளால் பொருளுண்மை தெளிதல், காண்டல் முதலிய மூன்றையும் காட்சி, அனுமானம், ஆகமம் எனவும், அனுபவம், யுக்தி, சுருதி எனவும் வழங்குவர். களவு, பொய் வஞ்சனை முதலிய குற்றங்களையுடையவன் எனத் தம்மை இழித்தற்குக் “களவறிந்தேன்” என்கின்றார். களவறிவு உடைமையைத் திருவள்ளுவர், “களவென்னும் காரறிவாண்மை” யெனப் பழிப்பர்.
இதனால், உபநிடதப் பொருளாயும், உலகியல் உறுதிப் பொருளாயும் இறைவன் விளங்குவது உரைத்தவாறாம். (82)
|