3142.

     எவ்வுலகும் எவ்வுயிரும் எச்செயலும் தோன்றி
          இயங்கும்இட மாகிஎல்லாம் முயங்கும்இட மாகித்
     தெல்வுலகும் நண்புலகுஞ் சமனாகக் கண்ட
          சித்தர்கள்தம் சித்தத்தே தித்திக்கும் பதங்கள்
     இவ்வுலகில் வருந்தநடந் தென்பொருட்டால் இரவில்
          எழிற்கதவந் திறப்பித்தங் கென்கையில்ஒன் றளித்தாய்
     அவ்வுலக முதல்உலகம் அனைத்துமகிழ்ந் தேத்த
          அம்பலத்தே நடம் புரியும் செம்பவளக் குன்றே.

உரை:

     துறக்க உலகம் முதலாகவுள்ள எல்லா வுலகங்களில் உள்ளவர்களும் விரும்பிப் போற்றத் தில்லையம்பலத்தே திருக்கூத் தியற்றும் சிவந்த பவளமலை போன்றவனே, எவ்வுலகங்களும், அவ்வுலகங்களில் வாழும் எல்லாவுயிர்களும், அவற்றின் செயல்கள் அத்தனையும் தோன்றி நின்று இயங்கும் இடமும், அவை யாவும் ஒடுங்கும் இடமுமாய், பகைவருலகம் நண்பருலகம் என வேறுபாடு காணாது ஒப்பக் கண்டு ஓம்புகின்ற சிந்தனையாளர்களின் சிந்தனைக் கண் நின்று தித்திக்கும் நின் திருவடி மலர்கள் மண்ணிற் பொருந்தி வருந்துமாறு, என் பொருட்டாக இரவில் நடந்து வந்து, கதவினைத் திறக்கச் செய்து, என் கையில் ஒன்று தந்தருளினாய்; சிவபரம் பொருளே, உன் கருணைத் திறத்தை என்னென்பேன்! எ.று.

     துறக்க உலகம், மண்ணுலகம், பாதல உலகம் என மூன்றாக வகுக்கப்படும் மூவகை யுலகமும் அகப்பட, “அவ்வுலக முதல் உலகம் அனைத்தும்” என்கின்றார். அவரவர் வினைக்கேற்ப உலகம் மூன்றாயினும், எங்கிருப்பவரும் தத்தம் பிறப்புயர்தல் வேண்டி வழிபாடு ஒழியாராதலின், “அனைத்துலகும் மகிழ்ந்தேத்த அம்பலத்தே நடம் புரியும் செம்பவளக்குன்று” எனப் போற்றுகின்றார். “மருவார் கொன்றை மதி சூடி மாணிக்கத்தின் மலை போல வருவார் விடைமேல்” (கட. மயா) எனச் சுந்தரரும் ஓதுவது காண்க. எல்லா வுலகங்களும் உயிர்களும் தோன்றி நிலவு மிடமும், எல்லாம் ஒடுங்குமிடமும் ஆகிய இரண்டுக்கும் வைப்பாகிய திருவருள், திருவடிகளாக உருவகஞ் செய்யப்படுதலின், “எவ்வுலகும் எவ்வுயிரும் எச்செயலும் தோன்றி இயங்கு மிடமாகித் தித்திக்கும் பதங்கள்” எனவும், “தித்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன் முந்திப் பொழிவன” (ஐயாறு) எனத் திருநாவுக்கரசர் செப்புதலின், “சித்தர்கள்தம் சித்தத்தே தித்திக்கும் பதங்கள்” எனவும் செப்புகின்றார். முயங்குமிடம்-ஒடுங்குமிடம். சித்தர்கள் -சிந்திக்கும் சிந்தனையாளர்கள். சிந்திப்பது சித்தமாகலின், சிந்தனை சித்தம் எனப்படுகிறது. சிந்திக்கும் சிந்தனையைத் தெளிய விளங்குவாராய், “தெவ்வுலகும் நண்புலகும் சமனாகக் கண்ட சித்தர்” என மொழிகின்றார். தெவ்வுலகு-பகைவர் உலகு.

     இதனால், பகை நட்பிரண்டையும் ஒப்பக் கருதும் சித்தர்களின் சித்தத் தியல்பு தெரிவித்தவாறாம்.

     (83)