3143.

     மானினொடு மோகினியும் மாமாயை யுடனே
          வைந்துவமும் ஒன்றினொன்று வதிந்தசைய அசைத்தே
     ஊனினொடும் உயிருணர்வங் கலந்துகலப் புறுமா
          றுறுவித்துப் பின்கரும ஒப்புவருந் தருணம்
     தேனினொடு கலந்தஅமு தெனருசிக்க இருந்த
          திருவடிகள் வருந்தநடந் தடியேன்பால் அடைந்து
     வானினொடு விளங்குபொருள் ஒன்றெனக்கும் அளித்தாய்
          மன்றில்நடத் தரசேநின் மாகருணை வியப்பே.

உரை:

     தில்லையம்பலத்தில் ஆடுகின்ற அருளரசே, பிரகிருதி மாயையும், அசுத்த மாயையும், சுத்த மாயையும் மூல மாயையும் ஒன்றொன்றின் அடங்கித் திருவருட் சத்தி கலக்கக் கலங்கி உடம்பின் கண்ணும் உயிரின் கண்ணும் கலந்து கலப்பாய் அமைவித்து பின்பு இருவினை யொப்புணர்வு எய்துங் காலத்து, தேன் கலந்த பால் போல சிந்தையில் இனிக்க விளங்கும் திருவடிகள் மண் பொருந்தி வருந்த நடந்து அடியேனை இரவின்கண் அடைந்து ஞான வானத்தின்கண் விளங்குவதாகிய ஒரு பொருளை எனக்குத் தந்தருளினாய்; நினது பெரிய கருணை வியக்கத்தக்கதாம். எ.று.

     பிரகிருதி மாயையை மான் என்றும், அசுத்த மாயையை மோகினி யென்றும், சுத்த மாயையை மாமாயை யென்றும், மூல மாயையை வைந்தவமென்றும் கூறுவது சிவாகம மரபு. சிவாகமத்தைச் சித்தாந்தம் என்பது கொண்டு இதனைச் சித்தாந்த மரபு என்றும் கூறுவர். பரவிந்துவாகிய திருவருட் பாராசத்தியின்கண் ஒடுங்கியிருந்து, அது தனது சங்கற்பத்தால் கலக்க வெளிப்படும் மாயை வைந்தவம் எனப்படும்; இதுவே மூலமாயையாகும். இவ்வைந்தவத்தின்கண் நிலவும் உலகுகளை உலகெலாம் என்னும் மெய்ம்மொழிப் பொருள் விளக்கத்தின்கண் சிவாகம சாரமாகக் கூறியவற்றுள், வைந்த வோற்பவ சுத்த மூர்த்தி விகற்ப சாமானிய தூயதன்மலட்சி யானுபவ சரியைச் சரியா முத்தி யுலகு முதலாகப் பல கூறப்படுவது காண்க. வைந்தவமாகிய மூலமாயை மேலும் கலக்குண்டு, சுத்த தத்துவங்களாகிய சிவ முதலியன தோன்றுதற்கும், சுத்தா சுத்த தத்துவமாகிய கலை வித்தை முதலாய தத்துவங்கள் உளவாதற்கும், அசுத்த தத்துவமான ஆன்ம தத்துவங்கள் தோன்றுதற்கும் முறையே மாமாயையும் மோகினியும் மானும் முதற் காரணமாதலால், “மானினொடு மோகினியும் மாமாயை யுடனே வைந்துவமும் ஒன்றினொன்று வதித்து அசைய அசைந்து” எனக் கூறுகின்றார். சுத்த மாயையாகிய மாமாயையின் காரியம் சிவ தத்துவ மைந்தும், சுத்தா சுத்தமாகிய மோகினியன் காரியம் வித்தியா தத்துவ மேழும், அசுத்த மாயையாகிய மானின் காரியம் ஆன்ம தத்துவம் இருபத்து நான்குமாகும். இந்த அசுத்த மாயை சில ஆகமங்களில் மூலப்பகுதி என வழங்கும். சிலர் வித்தியா தத்துவம் ஏழையுமே அசுத்த மாயா காரியமென உரைப்பதுண்டு. திருவருட் சத்தியாற் கலக்குண்பதை “அசைய அசைந்து” என வள்ளற் பெருமான் விளக்குகிறார். மாயையின் மயக்கம் உடம்பிலும் உயிருணர்விலும் கலப்பதால், “ஊனினொடு உயிருணர்வும் கலந்து கலப்புறுமாறுறுவித்து” என விளம்புகிறார். கரும வொப்பு-இருவினை யொப்புணர்வு. சிலர் கன்ம வொப்பினை நல்வினை தீவினைகள் சமநிலையவாதல் என்பார்; மாதவச் சிவஞான முனிவர், அதனை மறுத்து, இரண்டையும் ஒப்பக் கொண்டுவர்த்தல் என்பர். வானினொடு விளங்குபொருள்; ஞானகாசமாகிய சிவாகமப் பெரும்பொருள். இது கண்டுதான் ஆதமங்கலம் சந்திரசேகரப் பிள்ளை வடலூர் வள்ளலாரைச் 'சித்தாந்த சாகர அமிர்த போனக யோகாசனர், என்று சிறப்பிக்கின்றார் போலும்.

     இதனால், திருவருட் சத்தி வைந்தவம் கலக்குண்டு உடலுயிர்களை மயக்கும் திறம் கூறியவாறாம்.

     (84)