3144. பசுபாச பந்தம்அறும் பாங்குதனைக் காட்டிப்
பரமாகி உள்ளிருந்து பற்றறவும் புரிந்தே
அசமான மானசிவா னந்தஅனு பவமும்
அடைவித்தவ் வனுபவந்தாம் ஆகியசே வடிகள்
வசுமீது வருந்தியிட நடந்தடியேன் இருக்கும்
மனையைஅடைந் தணிக்கதவந் திறப்பித்து நின்று
விசுவாச முறஎனைஅங் கழைத்தொன்று கொடுத்தாய்
விடையவநின் அருட்பெருமை என்புகல்கேன் வியந்தே.
உரை: எருதேறும் பெருமானே, பசுபாசத் தொடர்பறுதற்குரிய நெறியைக் காட்டி, அவற்றிற் கெல்லாம் மேலாய் உள்ளேயிருந்து பற்றுவிடற்குத் திண்மையுதவி, அது வாயிலாக உயர்ந்த சிவானந்த அனுபவம் பெறுவித்து அந்த அனுபவமேயாகிய திருவடிகள் இரண்டும் நிலத்தின் மீது பொருந்தி வருந்த நடந்து அடியவனாகிய யான் இருக்கும் வீட்டுக்கு வந்து வாயிற் கதவைத் திறக்கச் செய்து, உட்புகந்து, நின்று அன்புடன் என்னைத் தான் நிற்குமிடத்துக்கு அழைத்து ஒன்று கொடுத் தருளினாயாகலின், நினது திருவருட் பெருமையை எவ்வாறு புகழ்ந்துரைப்பேன். எ.று.
விடை-எருது; விடையவ எனப் பொதுப்படக் கூறுதலால் எருதை ஊர்தியாகவும் கொடியாகவும் கூறலாம். பசு பாசம், யான் என்னும் உயிர்ப்பற்றும், எனதென்னும் உடைமைப் பற்றும் ஆகிய இரண்டையும் குறிக்கும். இருவகைப் பற்றுக்களையும் அறுக்கும் நெறி யறிவுறுத்த திறத்தை, “பசுபாச பந்தமறும் பாங்குதனைக் காட்டி” எனக் கூறுகிறார். பந்தம் -தொடர்பு. பாங்கு, நெறி, உயிர்க்கு வேறாகிய இருவகைப் பற்றுக்களையும் உயிரின் வேறாய் இருந்து உணர்வு வாயிலாக உடற்குள்ளிருந்து அறுக்க வுதவிய நலத்தைப் “பரமாகியுள்ளிருந்து பற்றறவும் புரிந்து” என மொழிகின்றார். “விளையாததொர் பரிசல்வரு பசுபாசவேதனை யொண்தளையாயின தவிரவ் வருள் தலைவன் “(முதுகுன்) என ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. அசமானம்-ஒப்பற்றது; உயர்ந்த தென்பது கருத்து. சிவபோகம் வேறு, சிவ போகானுபவம் வேறாதலின், “அசமான-மானசிவானந்தானுபவம் அடைவித்து அவ்வனுபவம் தாம் ஆகிய சேவடிகள்” என வுரைக்கின்றார். வசு-நிலம்; இது வசுதா என்றும் வசுதை என்றும் வழங்கும். வாயிற் கதவு வேலைப்பாட்டால் அழகுற அமைந்திருப்பது கொண்டு அதனை “அணிக்கதவம்” என இயம்புகிறார்.
இதனாற் பற்றைக் காட்டி அதனையறுக்கும் திறம் காட்டிச் சிவானந் தானுபவத்தைக் காட்டிச் சிவானந்தானுபமும் ஆகிய திறம் கூறியவாறாம். (85)
|