3145. ஆதியுமாய் அந்தமுமாய் நடுவாகி ஆதி
அந்தநடு வில்லாத மந்தணவான் பொருளாய்ச்
சோதியுமாய்ச் சோதியெலாந் தோன்றுபர மாகித்
துரியமுமாய் விளங்குகின்ற துணையடிகள் வருந்த
பாதியிர விடைநடந்து நான்இருக்கும் இடத்தே
படர்ந்துதெருக் கதவங்காப் பவிழ்த்திடவும் புரிந்து
ஓதியிலங் கெனையழைத்தென் கரத்தொன்று கொடுத்தாய்
உடையவநின் அருட்பெருமை என்னுரைப்பேன் உவந்தே.
உரை: என்னையுடைய பெருமானே, தொடக்கமும் இடையும் ஈறுமாய், தொடக்கமும் இடையும் ஈறும் தனக்கு இல்லாத நுண்பொருளாய், சோதியாகியும், ஒளிப் பொருள் யாவும் தோன்றும் பரஞ்சோதியாகியும் துரியமாகியும் விளங்குகிற இரண்டாகிய திருவடிகள் வருந்துமாறு, நள்ளிரவில் நான் இருக்குமிடத்துக்கு நடந்து வந்து தெருக்கதவைத் திறக்கவும் செய்து ஒதுக்கிடத்தே யிருந்த என்னை, யழைத்து என் கையிலொன்று கொடுத்தாய்; நினது திருவருளின் பெருமை என்னென்று மகிழ்ந்துரைப்பேன். எ.று.
உலகுகட் கெல்லாம் தோற்றமும் இடையும் நடுவுமாய் உள்ள தனது இருப்பு விளங்க, “ஆதியுமா யந்தமுமாய் நடுவுமாகி” எனவும்,. அதே நிலையில் தமக்குத் தோற்றமும் இடையும் கேடும் இல்லாமையுணர்த்தற்கு “ஆதியந்தம் இல்லாத மந்தணவான் பொருளாய்” எனவும் இயம்புகின்றார். மந்தணம் - இரகசியப் பொருள். நுண்மைத் தன்மை பற்றி, “மந்தண” மென்றும், பயன் விளைப்பதில் உயர்வறவுயர்ந்த பெருமையுடைய தென்றற்கு “வான்பொருள்” என்றும் கூறுகின்றார். தான் ஆதியந்த மில்லாததாயினும் பிற பொருளனைத்துக்கும் தான் ஆதியு மந்தமுமாவது ஒன்று; தான் சோதியாயினும் பிறசோதிப் பொருள் யாவும் தோன்றுதற்குத் தான் இடமாவது ஒன்று; இவ்விரண்டியல்புகளையும் இரண்டாகிய திருவடியாக உருவகம் செய்கின்றார். பரம்பொருளாதலையும் பரஞ்சோதியாதலையும் உணருமிடமாதல் பற்றித் “துரியமுமாய்” என்று சொல்லுகிறார். “துஞ்சு நாள் துறந்து தோற்றமுமில்லாச் சுடர்விடு சோதியெம்பெருமான் (பாம்புரம்) என ஞானசம்பந்தர் நவில்வது காண்க. பாதியிரவு - நள்ளிரவு. படர்தல்-வருதல். கதவைத் திறக்கச் செய்து உள்ளேயும் புகுந்தமை புலப்பட, “அவிழ்த்திடவும் புரிந்து” எனப் புகல்கின்றார். ஓதியில்-ஒதுக்கிடம். மூலையிற் கிடந்த என்னையழைத்துக் கொடுத்தற்கு ஏதுவாகியிருந்த நின் திருவருள் நினைவுக்கு இன்பம் தருகிற தென்பார், “நின்னருட் பெருமை உவந்து என்னுரைப்பேன்” என வுரைக்கின்றார்.
இதனால், ஆதியந்த மில்லாததாய்ச் சோதிக் கெல்லாம் சோதியாய்ப் பரம்பொருள் இருக்கும் திறம் கூறியவாறாம். (86)
|