3146. பாடுகின்ற மறைகளெலாம் ஒரு புறஞ்சூழ்ந் தாடப்
பத்தரொடு முத்தரெலாம் பார்த்தாடப் பொதுவில்
ஆடுகின்ற திருவடிகள் வருந்தநடந் தடியேன்
அடையும்இடத் தடைத்திரவிற் காப்பவிழ்க்கப் புரிந்து
நாடுகின்ற சிறியேனை அழைத்தருளி நோக்கி
நகைமுகஞ்செய் தென்கரத்தே நல்கினைஒன் றிதனால்
வாடுகின்ற வாட்டமெலாந் தவிர்த்துமகிழ் கின்றேன்
மன்னவநின் பொன்னருளை என்னெனவாழ்த் துவனே.
உரை: அருளரசே, பாடுகின்ற வேதங்கள் எல்லாம் ஒருபால் சூழ்ந்து ஆட பத்தான்மாக்களும் முத்தான்மாக்களும் ஒருபால் நின்று ஆடலைப் பார்த்து மகிழ்ந்தாட, அம்பலத்தில் ஆடுகின்ற நின் திருவடி மலர்கள் மண்ணிற் பொருந்தி வருந்துமாறு நடந்து வந்து அடியேன் தங்கியுள்ள இடத்தடைந்து, இரவில் கதவினைத் திறக்கச் செய்து, உன்னருளை நாடுகின்ற சிறியேனாகிய என்னை நின்னருகே அழைத்து, அருளோடு நோக்கி, முகத்தே அன்பு நகை செய்து, என் கையிலே ஒன்று கொடுத் தருளினாய்; இதனால், நான் வாடுகின்ற வாட்டமெல்லாம் நீங்கி மகிழ்வுறுகின்றேன். பெருமானே, நின் அழகிய திருவருளை என்னென்று போற்றுவேன். எ.று.
வேதம் ஓதுகின்ற வேதியர்கள் அம்பலத்தில் சூழ்ந்து நின்று, வேத கீதங்களைப் பாடுகின்றார்கள் என்றற்கு, “பாடுகின்ற மறைகளெலாம் ஒருபுறஞ் சூழ்ந்தாட” என்றும், பத்தி பண்ணுகின்ற பெருமக்களும் முத்திபெறச் சமைந்த முத்தான்மாக்களும் ஒருபால் நின்று ஆடல் நலங்கண்டு பாராட்டி மகிழ்கின்றார்கள் என்பாராய், “பத்தரொடு முத்தரெலாம் பார்த்துமகிழ்ந்தாட” என்றும் மொழிகின்றார். அடையுமிடம் - உறையுமிடம். காப்பவிழ்த்தல் - தாழ் நீக்கல். கொடுத்தது பெற்றதன் பயனாகத் தம்பால் நிகழ்ந்தது கூறுவாராய், “வாடுகின்ற வாட்டமெலாம் தவிர்ந்து மகிழ்கின்றேன்” என்று உரைக்கின்றார்.
இதனால், திருவருள் நல்கப் பெற்று மகிழ்ந்தமை தெரிவித்தவாறாம். (87)
|