3147. எம்மதத்தில் எவரெவர்க்கும் இயைந்தஅனு பவமாய்
எல்லாமாய் அல்லவுமாய் இருந்தபடி இருந்தே
அம்மதப்பொன் னம்பலத்தில் ஆனந்த நடஞ்செய்
அரும்பெருஞ்சே வடியிணைகள் அசைந்துமிக வருந்த
இம்மதத்தில் என் பொருட்டாய் இரவில்நடந் தருளி
எழிற்கதவந் திறப்பித்தங் கெனைஅழைத்தென் கரத்தே
சம்மதத்தால் ஒன்றளித்த தயவினைஎன் புகல்வேன்
தம்மைஅறிந் தவர்அறிவின் மன்னும்ஒளி மணியே.
உரை: தம் தன்மையையும், தம் தலைவன் தன்மையையும் அறிந்தவர் அறிவின்கண் நிலைபெறுகின்ற ஒளி பொருந்திய மாணிக்கமே! எவ்வெச் சமயத்தவர்க்கும் அவரவர்க்கும் பொருந்துகின்ற அனுபவப் பொருளாய், எல்லாமாகி, அல்லவுமாகி, இருந்தபடியே விகாரமின்றியிருந்து, அழகிய பொன்னம்பலத்தில் ஆனந்தக் கூத்தியற்றும் அருமையும் பெருமையும் பொருந்திய சேவடியாகிய தாமரை மலர்கள் மண்ணிற் பொருந்தித் தளர்ந்து வருத்தமுற, இந்நிலையில் எளியேன் என் பொருட்டாக இரவில் நடந்து வந்து அழகிய கதவினைகத் திறக்கச் செய்து, என்னை யுன்னருகழைத்து, என் கையிலே இசைவோடு ஒன்று கொடுத்தருளிய நின் அருட் டிறத்தைப் பெருமானே, நான் என்னென்று கூறுவேன்; எ.று.
தம்மை யறிந்தவர்-தம் தன்மையையும், தம்மையுடைய தலைவன் தன்மையையும் அறிந்த சான்றோர்கள். தம்மையறிந்த பெரியோர்களுடைய அறிவே தமக்கு இடமாக உறைபவனாதலின், “தம்மையறிந்தவர் அறிவின் மன்னும் ஒளிமணியே” என்கின்றார். அறிவினுள் அருளால் மன்னி” (சிவ. சித்தி) என அருணந்தி சிவனாரும் கூறுவர், எம்மதத்தில் என்றவிடத்து மதம், சமயத்தின் மேற்று. இருந்தபடியிருத்தல், விகாரமின்றி யிருத்தல். அசைதல், தளர்தல். அம்மதம் என்றவிடத்து மதம். அழகு, அகரம் உலகறி சுட்டு. இம்மதத்தில் என்றவிடத்து மதம், நிலைமை குறித்தது. சம்மதம் - இசைவு.
இதனால், எவ்வகைச் சமயத்தார்க்கும் அவ்வவர் ஞானானுபவமாய்த் திரிபின்றியிருக்கும் திறம் கூறியவாறாம். (88)
|