3148.

     பூதவெளி கரணவெளி பகுதிவெளி மாயா
          போகவெளி மாமாயா யோகவெளி புகலும்
     வேதவெளி அபரவிந்து வெளிஅபர நாத
          வெளிஏக வெளிபரம வெளிஞான வெளிமா
     நாதவெளி சுத்தவெறு வெளிவெட்ட வெளியா
          நவில்கின்ற வெளிகளெலாம் நடிக்கும்அடி வருந்த
     ஏதஎளி யேன் பொருட்டா நடந்தென்பால் அடைந்தே
          என்கையின்ஒன் றளித்தனைநின் இரக்கம்எவர்க் குளதே.

உரை:

     சிவ பரம்பொருளே, பூத வெளி, கரணவொளி, பகுதி வெளி, மாயா போக வொளி, மாமாயா யோக வெளி, அருள் நூல்கள் கூறுகின்ற வேதவெளி, அபர விந்து வெளி, அபர நாத வெளி, ஏக வெளி, பரம வெளி, ஞான வெளி, மாநாத வெளி, சுத்த வெறு வெளி, வெட்ட வெளியாக ஞானாசிரியர்களால் உரைக்கப்படுகின்ற வெளிகளில் எல்லாம் நடந்தருள்கின்ற நின் திருவடிகள் வருந்தக் குற்றங்களையுடைய எளியவனாகிய என் பொருட்டு நடந்து என்னிடம் எய்தி, என் கையில் ஒன்றைக் கொடுத்தருளினாய்; பெருமானே, நின் அருட் பண்பு யாவர்க்குளது? ஒருவரிடத்தும் இல்லை. எ.று.

     பூத வெளி, நிலம் முதலிய ஐம்பெரும் பூதங்களும் நின்று நிலவுமிடம். வெளியை ஆகாச மெனவும் ஞான நூலோர் வழங்குவர். கரண வெளி, மனம் முதலிய கரணங்கள் நின்றுலாவும் மனவெளி. பகுதியாவது மூலப் பிரகிருதி. இதனை ஆன்ம தத்துவம் இருபத்து நான்கும் இருந்து தொழிற்படும் ஆன்ம தத்துவாகாசம் எனவும் கூறுவர். மாயா போக வெளி, மாயா காரியமான வித்தியா தத்துவங்களின் போகம் நுகருமிடம். மாமாயயோக வெளி, சிவதத்துவம் ஐந்தும் ஒன்றியிருந்து செயற்படும் சுத்த மாயாகாசம். இதனையே சுத்த மாயா புவனம் என்றும் கூறுவர். வேதவெளி, வேதமும் வேத புருடனும் இருந்து செயற்படுமிடம். இதனை, வேத புவனம் என்பர். அபர விந்து வெளி, சிவ தத்துவத்திற் கூறப்படும் சத்தி யுலகு. அபர நாத வெளி, சிவ தத்துவத்திற் கூறப்படும் ஞானவுலகு. ஏக வெளி, மேற்கூறிய வெளிகள் அத்தனையும் தனக்குள்ளே யடங்கி யிருக்கும் வைந்தவாகாசம். பரமவெளி யென்பது வைந்தவத்திற்கும் அப்பாற்பட்ட பரசிவாகாசம். ஞானவெளி, ஞானமேயான புவனம். மாநாதா வெளியைப் பரநாத வெளி யென்றும் கூறுவர். சுத்த வெறு வெளி, வைந்தவமாயையும் திருவருட் சத்தியும் தன்னுள் ஒடுங்க நிற்கும் பர சிவாகார வெளி. வெட்ட வெளி, எப்பொருளுமின்றி எல்லாம் தன்னுள் ஒடுங்கச் சிவம் ஒன்றே நிற்பது. வெற்ற வெளியென்ற சொல் வெட்ட வெளியேன மருவிற்று. ஏதம்-குற்றம். குணங் குற்றங்களை யியல் பாகவுடைமையால், குற்றங்களால் எளிமை யெய்தியது பற்றி, வள்ளற் பெருமான் தம்மை “ஏத எளியேன்” என்கின்றார்.

     இதனால், மாயை, திருவருள், சிவம் ஆகிய மூன்றும் நிலவும் வெளி வகைகளை விளம்பியவாறாம்.

     (89)