3151.

     தஞ்சமுறும் உயிர்க்குணர்வாய் இன்பமுமாய் நிறைந்த
          தம்பெருமை தாமறியாத் தன்மையவாய் ஒருநாள்
     வஞ்சகனேன் புன்றலையில் வைத்திடவுஞ் சிவந்து
          வருந்தியசே வடிபின்னும் வருந்தநடந் தருளி
     எஞ்சலிலா இரவினிடை யானிருக்கும் இடஞ்சேர்ந்
          தெழிற்கதவந் திறப்பித்தங் கெனை அழைத்தொன் றளித்தாய்
     விஞ்சுபரா னந்தநடம் வியன்பொதுவிற் புரியும்
          மேலவநின் அருட்பெருமை விளம்பலெவன் வியந்தே.

உரை:

     மேம்படுகின்ற பரானந்தத் திருக்கூத்தைப் பெரிய அம்பலத்தின்கண் புரிகின்ற மேலவனே, எளிமையுற்ற உயிர்கட்கு உணர்வாயும் இன்பமாயும் நிறைந்து விளங்கும் தம்முடைய பெருமையைத் தாமே யறியாத தன்மை யுடையவாயும் உள்ள திருவடிகள், ஒருநாள் வஞ்ச நினைவுகளையுடைய எளியேனுடைய புல்லிய தலையிற் பொருந்த வைத்த போது வருந்திச் சிவந்தனவாக, பின்பு மிக வருந்தும்படி இரவின்கண் யான் இருக்குமிடத்துக்கு நடந்து வந்து உயர்ந்த கதவைத் திறக்கச் செய்து என்னையழைத்து எனக்கொன்று தந்தருளினாய்; அதற்கேதுவாகிய நினது திருவருளின் பெருமையை என்னென்று விளம்புவது. எ.று.

     பரானந்தம் - மேலான இன்பம்; சிவ ஞானத்தால் உண்டாகும் இன்பம். கண்டு பரவும் அன்பர்களுக்குப் பரானந்தம் பெருகுவது பற்றி, “விஞ்சு பரானந்தம்” என விளம்புகிறார். வியன் பொது, அகன்ற அம்பலம். மலவிருள் மறைப்பால் எளிமை யுறுவது பற்றி, “தஞ்சமுறும் உயிர்” என்று கூறுகிறார். உயிர்கட்கு உணர்வாயும் இன்பமாயும் இருந்து இரண்டையும் பெறுவித்தல் இறைவனது அருட் செயலாகும். அவனுடைய ஆணையின்றியே தாமாக நிகழ்தலின், “தம் பெருமை தாமறியாத் தன்மையவாய்” எனக் கூறுகிறார். “தம் பெருமை தான்றியாத் தத்துவன்காண்” (சாழல்) என மணிவாசகரும் மொழிவது காண்க. எஞ்சல்-குறைபடல்.

     இதனால், இறைவன் உயிர்கட்கு அறிவும் இன்பமும் நல்குதல் கூறியவாறாம்.

     (92)