3152. எழுத்தினொடு பதமாகி மந்திரமாய்ப் புவனம்
எல்லாமாய்த் தத்துவமாய் இயம்புகலை யாகி
வழுத்துமிவைக் குள்ளாகிப் புறமாகி நடத்தும்
வழியாகி நடத்துவிக்கும் மன்னிறையு மாகி
அழுத்துறுமிங் கிவையெல்லாம் அல்லனவாய் அப்பால்
ஆகியதற் கப்பாலும் ஆனபதம் வருந்த
இழைத்துநடந் திரவில்என்பால் அடைந்தொன்று கொடுத்தாய்
எம்பெருமான் நின்பெருமை என்னுரைப்பேன் வியந்தே.
உரை: எங்கள் பெருமானே, வன்னம், பதம், மந்திரம், புவனம், கலை, தத்துவம் எனச் சொல்லப்படும் இவை ஆறினுக்கு அகமும் புறமுமாய் நடத்தும் அத்துவாவாகி எல்லாவற்றையும் நடத்துகின்ற பெரிய இறைவனாகி, ஒன்றினொன்றாக விருக்கும் இவை யாவு மல்லவாய் அவற்றிற்கு அப்பாலும் அதற்கப்பாலுமாய் நின்ற திருவடிகள் வருந்துமாறு இராப் பொழுதில் என்பால் நடந்து போந்து ஒன்றினைக் கொடுத்தருளினாய்; அதற் கேதுவாகிய நினது திருவருட் பெருமையை வியந்து யாதனை உரைப்பேன். எ.று.
எழுத்து, பதம், மந்திரம் என்ற மூன்றையும் சொற் பிரபஞ்ச அத்துவாக்கள் என்றும், புவனம், கலை, தத்துவம் என்ற மூன்றையும் பொருட் பிரபஞ்ச அத்துவாக்கள் என்றும் கூறுவர். பிரபஞ்சம் - உலகு. பொருளுலகில் கலையென்பது உடம்பும், தத்துவம் அதன் கண்ணுள்ள கருவி கரணங்களைக் குறிக்கும். புவனம் - நிலம். இரண்டுலகுகளிலும் செய்யப்படும் வினைகள் நல்வினை தீவினை என இரண்டாகலின், வினைகட்கு எழுத்து முதலிய ஆறும் வழியாதல் பற்றி, அத்துவா என நூல்களில் வழங்குகின்றன. இந்த அத்துவாக்களாகவும், அவற்றின் அகம் புறம் இரண்டிலும் கலந்திருப்பது பற்றி, “இவைக்கு உள்ளாகிப் புறமாகி நடத்தும் வழியாகி” என வுரைக்கின்றார். இவ்வத்துவாக்களில் உலகுகட்கு அப்பாலும் அப்பாலுக் கப்பாலும் இறைவன் இயங்குதலால் “அப்பாலாகி அதற்கப்பாலும் ஆன பதம்” என அறிவிக்கின்றார்.
இதனால், அத்துவாக்களின் அகமாயும் புறமாயும் அப்பாலுக்கப்பாலாயும் இறைவன் இருக்கும் திறம் கூறியவாறாம். (93)
|