3153. மாவின்மணப் போர்விடைமேல் நந்திவிடை மேலும்
வயங்கிஅன்பர் குறைதவிர்த்து வாழ்வளிப்ப தன்றிப்
பூவின்மணம் போல்உயிருக் குயிராகி நிறைந்து
போகம்அளித் தருள்கின்ற பொன்னடிகள் வருந்தத்
தாவிநடந் திரவின்மனைக் கதவுதிறப் பித்தே
தயவுடன்அங் கெனைஅழைத்துத் தக்கதொன்று கொடுத்தாய்
நாவின்மணந் துறப்புலவர் வியந்தேத்தும் பொதுவில்
நடம்புரியும் நாயகநின் நற்கருணை இதுவே.
உரை: நாநலம் கலந்து மிகப் புலவர்கள் வியந்து போற்றும் தில்லையம்பலத்தின்கண் திருநடம் செய்கின்ற தலைவனே, திருமகளை மணந்திருக்கும் திருமாலாகிய விடையின் மேலும், நந்தியாகிய விடையின் மேலும் எழுந்தருளி மெய்யன்பர்களின் குறையைப் போக்கி நல்வாழ்வளிப்பதுடன் பூவின்கண் நறுமணம் போல் உயிர்க்குயிராய்க் கலந்து நிறைந்து இன்பது அளிக்கின்ற திருவடிகள் வருந்தும்படி இரவின்கண் தாவி நடந்து போந்து யான் இருந்த வீட்டின் கதவைத் திறக்கச் செய்து உட்புகுந்து நின்று அவ்விடத்தே என்னை வருவித்துத் தகுவ தொன்றைக் கொடுத்தருளினாய்; அதற்கு ஏதுவாகிய நின்னுடைய கருணை இத்தன்மைத்தாகும். எ.று.
தாம் பாடும் பாட்டுக்கள் இனிமையும் பொருணலமும் சிறக்குமாறு தில்லையம்பலத்தைப் புலவர் பெருமக்கள் பாடும் சிறப்பு விளங்க, “நாவின் மனந்துறப் புலவர் வியந்தேத்தும் பொதுவில்” எனப் புகல்கின்றார். ம-திருமகள். போய் செய்து தீயன விலக்கி உலகம் காக்கும் பெருமானாதலால் திருமாலாகிய விடையைப் “போர் விடை” யென்று சிறப்பிக்கின்றார். சிவபிரான் இவர்ந்து போதரும் விடையும் “நந்தி” எனப்படுதலின், “நந்தி விடை” என்று கூறுகின்றார். வினையால் விளையும் அசத்தினைப் போக்கி ஞானத்தால் இன்ப வாழ்வு பெறுவித்தல் விளங்க, “குறை தவிர்த்து வாழ்வளிப்ப” தென வுரைக்கின்றார். “வினையால் அசத்து விளைதலால் ஞானம் வினை தீரினன்றி விளையாவாம்” (சிவ. போ) என மெய்கண்டார் கூறுவது காண்க. உயிர்க்குயிராய் விளங்குதலை “பூவின் மணம் போல்” என விளக்குகின்றார். உற்ற யாக்கையின் உறுபொருள் நறுமலர் நாற்றம் போற்பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள்” (அதிசயப்) என மணிவாசகரும், “பூவாகிப் பூவுக்கோர் நாற்றமாகிப் புக்குள்ளால் வாசமாய் நின்றான்” (நின்றதாண்டகம்) என நாவுக்கரசரும் உரைப்பதறிக. போகம் - செய்வினைகள் விளைவிக்கும் பயன். தாவி நடத்தல் விரைவுக் குறிப்பு. தகுதிக் கேற்ப அளித்தமை புலப்பட, “தக்க தொன்று கொடுத்தாய்” என வுரைக்கின்றார்.
இதனால், இறைவனுடைய இருப்பும் அருட் செயலும் விளக்கியவாறாம். (94)
|