3154.

     மணப்போது வீற்றிருந்தான் மாலவன்மற் றவரும்
          மனஅழுக்கா றுறச்சிறியேன் வருந்தியநாள் அந்தோ
     கணப்போதுந் தரியாமற் கருணைஅடி வருந்தக்
          கங்குலிலே நடந்தென்னைக் கருதிஒன்று கொடுத்தாய்
     உணப்போது போக்கினன்முன் உளவறியா மையினால்
          உளவறிந்தேன் இந்நாள்என் உள்ளமகிழ் வுற்றேன்
     தணப்போது மறைகளெலாந் தனித்தனிநின் றேத்தத்
          தனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.

உரை:

     வேறாக வைத்து ஒதுகின்ற வேதங்கள் எல்லாம் தனித்தனியாகநின்று போற்ற ஒப்பற்ற அம்பலத்தின்கண் நின்று ஆனந்தக் கூத்தாடுகின்ற தலைவனே, மணங்கமழும் தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகனும், திருமாலும், மற்றைத் தேவர்களும் பிறரும் அழுக்காறு கொள்ளுமாறு, சிறியவனாகிய யான் வருத்தமுற்ற அன்று, அந்தோ! ஒரு நொடிப் பொழுதும் அது காணப் பொறாமல் நின் அருளுருவாய திருவடிகள் மண்ணிற் பொருந்தி வருந்துமாறு, இரவில் நடந்து, என்னையும் மதித்து, என் கையில் ஒன்று கொடுத்தருளினாய்; முன்பு, உன் திருவருளைப் பெறும் உபாயம் அறியாமையால், உண்பதிலேயே காலத்தைப் போக்கினேன்; பெருமானே! இவ்வுபாயத்தை இன்று அறிந்து கொண்டேனாதலால், என் உள்ளமெல்லாம் மகிழ்ந்து நிறைகின்றேன். எ.று.

     இருக்கு முதலிய வேதங்கள், மந்திரங்களும் அவற்றின் இயல், இடங்களும் பிராமணங்களுமாய் நின்று, ஓதுபவர்களையும் ஒதுப்படும் தெய்வங்களையும் வேறு வைத்து ஒதுகின்றனவாதலால், அவற்றைத் “தணப்போது மறைகள்” என்றும், வேதங்கள் எல்லாவற்றிலும் இச்சிறப்பே காணப்படுவதால் “எல்லாம்” என்றும் இயம்புகின்றார். தணப்பு-வேறாதல். இருக்கு சாமம் முதலிய வேதங்களை ஒதுபவர் தனித்தனிக் குழுவாக நின்று ஒதுவராதலின், “தனித்தனி நின்றேத்த” என்கின்றார். “மணப்போது” என்பது ஈண்டு மணங் கமழும் தாமரை மலரின் மேற்று. கம்பரும் “கந்த மலரிற் கடவுள்” (பாலகா) என்பர். மாலவன்-திருமால். உயிர் வருத்தங்க கண்டு தரியாது கடிது போந்தருளுதல் இறைவன் இயல்பாதல் கண்டு வியந்து மகிழ்வதே யன்றிப் பிரமன் முதலிய தேவர்கள் அழுக்காறு கொள்ளாராயினும், மக்கள் நிலையில் வைத்து எண்ணுகின்றாராதலின், “மன அழுக்காறுற” என உரைக்கின்றார். பிறராக்கங் காணப்பொறாது அழுக்காறுறுவது மக்கள் இயல்பு. கணப் பொழுது-நொடிப்பொழுது. கங்குல் -இரவு. உளவு -உபாயம். திருவருட் பேற்றுக்குரிய நெறி, நெறி பிறழாது நின்று பெற்ற பேறாதலின், “உள்ளம் மகிழ்வுற்றேன்” என்கின்றார். “உள்ளிய வினை முடித்தன்ன இனியோள்” (நற். 3) எனப் பிறரும் கூறுவர்.

     இதனால், நாம் திருவருள் நலம் பெற்றது வியந்து கூறியவாறாம்.

     (95)