3155.

     நடுங்கமலக் கண்குறுகி நெடுங்கமலக் கண்விளக்கும்
          நல்லதிரு வடிவருந்த வல்இரவில் நடந்து
     தொடுங்கதவந் திறப்பத்துத் துணிந்தெனையங் கழைத்துத்
          துயரமெலாம் விடுகஇது தொடுகஎனக் கொடுத்தாய்
     கொடுங்குணத்தேன் அளவினில்என் குற்றமெலாங் குணமாக்
          கொண்டகுணக் குன்றேநின் குறிப்பினைஎன் புகல்வேன்
     இடுங்கடுக என்றுணர்த்தி ஏற்றுகின்ற அறிவோர்
          ஏத்தமணிப் பொதுவில்அருட் கூத்துடைய பொருளே.

உரை:

     திருவருள் விரைந்து நல்குவான் என்று ஊக்குகின்ற அறிவுடையோர் போற்ற அழகிய அம்பலத்தே அருட் கூத்தியற்றுகின்ற பரம்பொருளே, மலவிருளால் மறைக்கப்பட்ட அறிவு சுருங்கிக் கெடும் வண்ணம் நீண்ட இதழ்களையுடைய தாமரை மலர் போலப் பொலிகின்ற அழகிய திருவடிகள் மண்ணிற் பொருந்தி வருந்துமாறு, செறிந்த இருள் இரவில் நடந்து வந்து வாயிலிற் பொருத்தப்பட்ட கதவினைத் திறக்கச் செய்து, “துன்ப மெல்லாம் தவிர்க; இது பெறுக” என என் கையில் ஒன்று கொடுத்தருளினாய்; கொடுமைக் குணமுடைய என்னளவில், என் குற்றமெலாம் குணமாகக் கொண்டருளிய குணக் குன்றமே! நின் திருவருட் குறிப்பின் திறத்தை என்னென்று கூறுவேன். எ.று.

     திருவருட் செல்வத்தை நினைந்து பரவுவார்க்கு விரைந்து நல்கும் இயல்பினனென்று சொல்லி இறைவன் வழிபாட்டில் ஊக்குகின்ற சான்றோர்களை “இடுங் கடுக என்றுணர்த்தி யேற்றுகின்ற அறிவோர்” என்றியம்புகின்றார். மலக்கண் குறுகி நடுங்க என இயைக்க. அறிவை மறைக்கும் மலவிருள் சுருங்கிக் கெட அருள் ஒளி நல்கும் திருவடி என்றற்கு, “நடுங்க மலக்கண் குறுகி விளங்கும் நல்ல திருவடி” என்கின்றார். நீண்ட இதழ்களையுடைமை பற்றித் தாமரையை, “நெடுமகலம்” என்கின்றார். வல்லிரவு-ஒளி புகாவாறு செறிந்த இருளுடைய இரவு. வாயிலோடு நன்கு தொடுக்கப்பட்ட கதவாகலின், “தொடுங் கதவம்” என்கின்றார். தகுதிப்பாடு அறிந்து அழைத்தமை தோன்றத் “துணிந்து” என்கின்றார். கொடுங் குணம்- கொடுமைக் குணம். குற்றத்தைக் குணமாகக் கருதிய வழி வெறுப்புத் தோன்றற்கு இடமில்லையாதலின், “குற்றமெலாங் குணமாகக் கொண்ட குணக்குன்றே என்கின்றார். குறிப்பு-திருவருட் குறிப்பு.

     இதனால், குற்றத்தைக் குணமாகக் கொண்டு அருள் புரியும் இறைவனது அருளியல் திறம் கூறியவாறாம்.

     (96)