3157.

     சிறியவனேன் சிறுமையெலாம் திருவுளங்கொள் ளாதென்
          சென்னிமிசை அமர்ந்தருளும் திருவடிகள் வருந்தச்
     செறியிரவில் நடந்தணைந்து நானிருக்கு மிடத்தே
          தெருக்கதவந் திறப்பித்துச் சிறப்பின்எனை அழைத்துப்
     பிறிவிலதிங் கிதுதனை நீ பெறுகவெனப் பரிந்து
          பேசிஒன்று கொடுத்தாய்நின் பெருமையைஎன் என்பேன்
     பொறியின்ற வோர்துதிக்கப் பொதுவில் நடம் புரியும்
          பொருளேநின் அருளேமெய்ப் பொருள்எனத்தேர்ந்தனனே.

உரை:

     நன்ஞானமுடைய அறவோர் தொழுது பரவத் தில்லையம்பலத்தின்கண் திருக் கூத்தாடும் சிவ பரம்பொருளே, சிறியவனாகிய என்னுடைய சிறுமைகள் எல்லாவற்றையும் மனத்திற் கொள்ளாமல் என் தலைமேல் பொருந்துகின்ற நின் திருவடிகள் மண்ணிற் பொருந்தி வருந்த இருள் செறிந்த இரவின்கண் நான் இருக்குமிடத்துக்கு நடந்து போந்து தெருவாயிற் கதவைத் திறக்கச் செய்து உட்புகுந்து என்னைத் தனிப்பட அழைத்து, “இது வேறன்று” இங்கே இதனைப் பெற்றுக் கொள்க” என அன்பு மொழி பேசி ஒன்றினைக் கொடுத்தருளினாய்; நினது பெருமையை என்னென்று கூறுவேன்; நினது திருவருளொன்றே மெய்ம்மையான பொருள் என்று உணர்ந்து கொண்டேன். எ.று.

     பொறி-ஈண்டுச் சிறந்த ஞானத்தின் மேற்று. சிவஞானச் செல்வர்களை இங்கே “பொறியின் அறவோர்” எனப் புகல்கின்றார். சிறுமை-அறிவாற்றிலிற் சிறுத்தல். சிறிதாய வழிக் குற்றம் பெருகுதலின், சிறியனேன் என்பது குற்ற முடையேன் என்பதுபட வழங்குகிறது.

     அடியார் தலைகள் திருவடியிற் பட வணங்குவது சமய நெறியில் திருவடி தீக்கை எனப்படும். சென்னி மிசை யமர்ந்தருளும் திருவடிகள்-தலைமேற் படுமாறு தீண்ட வணங்கத்தக்க திருவடிகள். தலைவர் திருவடிகள் தலைமேற் படுவதைத் திருவருட் பேறு எனப் பண்டைப் பெரியோர் கருதினர். “எம்மான் தன் அடிக் கொண்டேன் முடிமேல், வைத்திடுமென்னும் ஆசையால் வாழ்கின்றேன் நான் அறிவிலா” (அதிகை) என நம்பியாரூரர் உரைப்பது காண்க. இருள் செறிந்த நள்ளிரவு, செறி யிரவு எனப்படுகிறது. தனிப்பட அழைத்தமை புலப்பட, “சிறப்பில் எனை யழைத்து” எனக் கூறுகின்றார். தனிப்பட அழைத்தற்குரிய சிறப்பில்லாத என்னை என்றற்கு இவ்வாறு கூறுகிறார் என்பதும் உண்டு. பிறிவிலது - தொடர்பில்லாத தன்று; வேறன்று என்பதாம். பரிதல் -அன்பு செய்தல். சிறப்பில்லாத சிறியனாகிய என்னைத் தனித்தழைத் தாண்டருளியது பெருமைச் செயலாதலை வியந்து “நின் பெருமையை என்னென்பேன்” என வுரைக்கின்றார்.

     இதனால், திருவருட் பெருமையை எடுத்தோதி வியந்தவாறாம்.

     (98)