3158.

     அடிநாளில் அடியேனை அறிவுகுறிக் கொள்ளா
          தாட்கொண்டென் சென்னிமிசை அமர்ந்தபதம் வருந்தப்
     படிநாளில் நடந்திரவில் அடைந்தருளித் தெருவில்
          படாகதவந் திறப்பித்துப் பரிந்தெனைஅங் கழைத்துப்
     பிடிநாளு மகிழ்ந்துனது மனங்கொண்ட படியே
          பேரறஞ்செய துறகஎனப் பேசிஒன்று கொடுத்தாய்
     பொடிநாளும் அணிந்துமணிப் பொதுவிலநடம் புரியும்
          பொருளேநின் அருளேமெய்ப் பொருள்எனத் தேர்ந்தனனே.

உரை:

     நாளும் திருநீறணிந்து மணி பதித்த அம்பலத்தில் திருக்கூத்தாடும் சிவபரம் பொருளே, இளம் வயதில் எனது அறிவு நிலையைக் கருதாமல் ஆட்கொண்டு என் தலையில் தோய்ந்து அருளிய திருவடிகள் மண்ணிற் தோய்ந்து வருத்தமுற, நிலத்தில் நாட காலையே நடக்க லுற்று இரவுப் போதில் யான் இருக்கும் வீட்டை யடைந்து தெருவாயிற் கதவைத் திறக்கச் செய்து அன்புடன் என்னை யழைத்து, “நான் தரும் இதனைக் கையிற் பிடி; நாளும் மகிழ்ச்சியுடன் உனது மனம் விரும்புகிறபடி பெரிய அறங்களைச் செய்க” என்று சொல்லி ஒன்றை எனது கையிற் கொடத்தாய்; இதனால் உனது திருவருளே மெய்ம்மையமைந்த பொருளாம் எனத் தெளியக் கொண்டேன். எ.று.

     அடிநாள் - இளமைப்பருவம். இளமைக்காலத்தில் அறிவு குறைவாக இருக்குமாகையால் அதனைக் கருதிற்றிலர் என்றற்கு, “அறிவு குறிக் கொள்ளாது ஆட்கொண்டு” என்றும், அப்பொழுதே திருவடி ஞானம் அருளினமை புலப்படுத்தற்குச் “சென்னிமிசை யமாந்த பதம்” என்றும் இயம்புகின்றார். படி-நிலம். தெருவிற் படர் கதவம். தெருவுக்குப் போகும் வாயிற் கதவு. இதனை வாங்கு என்பது இதனைப் பிடி எனவும் வழங்கும். பொடி-திருநீறு. “பொடி தனைப் பூசு மார்பிற் புரிநூல் ஒருபாற் பொருந்த” (சாத்த மங்கை) எனத் திருஞானசம்பந்தர் கூறுவது காண்க.

     இதனால் இளம் பருவத்தே திருவடி ஞானம் பெற்றமை கூறியவாறாம்.

     (99)