3161.

    என்வடிவந் தழைப்பஒரு பொன்வடிவந் தரித்தே
        என்முன் அடைந் தெனைநோக்கி இளநகைசெய் தருளித்
    தன்வடிவத் திருநீற்றுத் தனிப்பைஅவிழ்த் தெனக்குத்
        தகுசுடர்ப்பூ அளிக்கவும்நான் தான்வாங்கிக் களித்து
    மின்வடிவப் பெருந்தகையே திருநீறும் தருதல்
        வேண்டுமென முன்னரது விரும்பியளித் தனம்நாம்
    உன்வடிவிற் காண்டியென உரைத்தருளி நின்றாய்
        ஒளிநடஞ்செய அம்பலத்தே வெளிநடஞ்செய் அரசே.

உரை:

     ஒளி திகழும் நடம் புரிகின் அம்பலத்தின்கண், பரவெளி நடனத்தைச் செய்கின்ற அருளரசே, எனது உருவத் திருமேனி வளம் பெறுவது கருதிப் பொன் மேனி கொண்டு என் முன்பு வந்து என்னைப் பார்த்துப் புன்னகை செய்து, தனது அழகிய திருநீறு நிறைந்த சிறந்த பையை அவிழ்த்து, எனக்கு ஒளியுடைய பூ வொன்றைக் கொடுக்கவும், நான் அதனை வாங்கி மேனியில் தரித்தும் ஆர்வம் தீராமையால் மின் போன்ற மேனிகொண்ட பெருந்தகையே, எனக்குத் திருநீரும் தரல்வேண்டுமெனக் கேட்டேனாக, முன்பே அதனை விரும்பியுனக்குத் தந்திருக்கிறோம்; அதனை உன் மேனி மேலே காண்பாயாக எனச் சொல்லியருளினாய்; உன் திருவருளை என்னென்பேன். எ.று.

     பொன்னிற மேனியுடைய சான்றோர் ஒருவர் உருவிற் போந்தமை தெரிவித்தற்கு, “பொன் வடிவம் தரித்தே என் முன் அடைந்து” என்றும், அவ்வடிவ முற்றது அதனைக் கண்டு களிக்கும் என் மேனியும் அதுபோல் திருவருள் வளம் பெறற் பொருட்டுப் போலும் என்பாராய், “என் வடிவம் தழைப்ப” என்றும் கூறுகின்றார். உள்ளத்தில் நிறையும் அன்பைப் புலப்படுத்துவது மலர்ந்த முகத்தில் தவழும் முறுவல் நகையாதலால், “இளநகை செய்தருளி” எனவும், தம்மிடத்திருந்த திருநீற்றுப் பையை யவிழ்த்து அதனுள் வைத்திருந்த புதுப் பூ வொன்றை எடுத்து அச்சான்றோர் கொடுத்ததை எடுத்து மொழிவாராய், “திருநீற்றுப் பையை அவிழ்த்து எனக்குச் சுடர்தரு பூ அளிக்கவும்” எனவும் உரைக்கின்றார். இளநகை - புன்சிரிப்பு. திருநீற்றுப் பையும் பொன்னிறம் கொண்டிருந்தமை தோன்றத் “தன் வடிவத் திருநீற்றுப் பை” எனக் கூறுகிறார். புதுப் பூ என்ற்குச் “சுடர்தரு பூ” என்கிறார். புதிது மலர்ந்தொளிரும் பூவைச் சுடர்ப்பூ என்பர். சுடர்ப் பூந்தாமரை” என்றும், “சுடர்ப் பூங்கொன்றை” (அகம். 6, 115) என்றும் சான்றோர் உரைப்பர். அதனை ஏற்றுக் கண்களில் ஒற்றி முடிமேல் அணிந்து கொண்டதோடு, அமையாமல் திருநீறும் வேண்டினமை பற்றி, “பெருந்தகையே திருநீறும் தருதல் வேண்டும் என” இயம்புகிறார். யாம் அதனை மறக்கவில்லை; முன்னரே, அளித்துள்ளோம், உன் மேனியைப் பார்த்தறிக என்பாராய், “முன்னர் அது விரும்பி யளித்தனம் உன் வடிவிற் காண்டி” என்கின்றார். காண்டி - இகர வீற்று முன்னிலையேவல் வினை. அதனைக்கொண்டெடுத்து மொழிகின்றாராகலின், “காண்டி என உரைத்தருளினாய்” என வுரைக்கின்றார். ஒளி மிக வுடைமை புலப்பட, “மின் வடிவப் பெருந்தகையே” என்கின்றார்.

     இதனால், பூப் பெற்று மகிழ்ந்து திருநீறு கேட்டார்க்கு, அதனை முன்பே கொடுத்தமை கூறியவாறாம்.

     (2)