3162.

    அழகுநிறைந்திலகஒரு திருமேனி தரித்தே
        அடியேன்முன் எழுந்தருளி அருள்நகைகொண் டடியார்
    கழகநடு எனை இருத்தி அவர்க்கெல்லாம் நீறு
        களித்தருளி என்னளவிற் கருணைமுக மலர்ந்து
    குழகியற்செஞ் சுடர்ப்பூவைப் பொக்கணத்தில் எடுத்துக்
        கொடுத்தருளி நின்றனை நின் குறிப்பறியேன் குருவே
    மழகளிற்றின் உரிவிளங்க மணிப்பொதுவிற் சோதி
        மயவடிவோ டின்பநடம் வாய்ந்தியற்றும் பதியே.

உரை:

     இளங்களிற்றின் தோற் போர்வை ஒருபால் விளங்க, மணியிழைத்த அம்பலத்தின்கண் ஒளி மயமான மேனியுடன் இன்ப நடனம் பொருந்தப் புரிந்தருளும் தலைவனே, எனக்குக் குருவே, அழகு நிறைந்தொளிரும் திருமேனி கொண்டு அடியவனாகிய என் கண் முன்பு போந்து அன்பு தோன்றும் புன்னகை தவழ அடியார் கூட்டத்தின் நடுவே என்னை இருக்கச் செய்து அவர்கட் கெல்லாம் திருநீற்றை உவந்தளித்த போது என்னைப் பார்த்து, அருள் கொண்ட முகம் மலர்ந்து, புதுமை மாறாத செஞ்சுடர் கொண்ட பூ வொன்றைப் பையினின் றெடுத்துக் கொடுத்து நின்றாயாக, அப்போது உன் மனக் கருத்தை அறியா தொழிந்தேன். எ.று.

     மழ களிறு - இளங் களிறு. உரி - தோற் போர்வை. மணி பொது - பல்வகை மணிகள் பதித்த பொற் சபை. கூத்தப் பெருமானது திருமேனி ஒளிமயமாய் விளங்குவது பற்றி, “சோதி மய வடிவோடு” எனவும், கூத்தால் உயிர் கட்கு இன்பம் விளைதலின், “இன்ப நடம் வாய்ந்தியற்று பதியே” எனவும் இயம்புகிறார். ஞானம் நல்குதலாற் “குருவே” என்று புகழ்கின்றார். தம் முன் போந்த சான்றோர் அழகிய மேனியும் கண்டார் விரும்பும் பொலிவும் உடையராய்த் தோன்றினமையின் “அழகு நிறைந்திலக ஒரு திருமேனி தரித்து அடியேன் முன் எழுந்தருளி” என்றும், அங்குக் கூடியிருந்த அடியார் கூட்டத்திடையே தம்மைச் செலுத்தி இருக்க வைத்தமையின், “அடியார் கழக நடு எனை யிருத்தி” என்றும் கூறுகின்றார். தம்மைப் பிரித்துக் கூட்டத்திடையே இருக்கச் செய்த போது அவர் முகத்தில் நிறைந்த அன்பு தவழ்ந்தமை விளங்க “அருள் நகை கொண்டு” எனக் குறிக்கின்றார். பின்பு அடியார்கள் அனைவர்க்கும் திருநீறு கொடுக்கும் போது, தனக்கு மாத்திரம் வேறாகப் பையை அவிழ்த்து சிவந்த புதுப் பூவைத் தந்தமை கூறுவாராய், “அவர்க்கெல்லாம் திருநீறருளி என்னளவில் பொக்கணத்தில் எடுத்துச் செஞ்சுடர்ப் பூவைக் கொடுத்தருளி நின்றனை” என வுரைக்கின்றார். நீறும் பூவும் கொடுத்த போது அச்சான்றோர்பால் விளங்கிய அன்பு நிலையை, “களித்தருளி” என்றும், “கருணை முகம் மலர்ந்து” என்றும் எடுத்து மொழிகின்றார். அன்று மலர்ந்த பூவாதல் தோன்ற, “குழகியற் பூ” என்கின்றார். குழகு - இளமை; புதுமையுமாம். பொக்கணம் - திருநீற்றுப் பை. இருந்தார் பலரினின்றும் வேறு பிரித்தருளியதற்குக் கருத்தொன்று இருத்தல் வேண்டும்; அதனை நான் அறிந்திலேன் என்பாராய், “நின் குறிப்பறியேன்” எனக் கூறுகிறார்.

     இதனால் அடியார் பலரிற் பிரித்துத் தனிச் சிறப்பளித்த திறம் தெரிவித்தவாறாம்.

     (3)