3163.

    விலைகடந்த மணிஎன ஓர் திருமேனி தரித்து
        வினையேன்முன் எழுந்தருளி மெய்யடியார் விரும்பக்
    கலைகடந்த பொருட்கெல்லாங் கரைகடந்து நாதக்
        கதிகடந்த பெருங்கருணைக் கடைக்கண்மலர்ந் தருளி
    அலைகடந்த கடல்மலர்ந்த மணச்செழும்பூ அடியேன்
        அங்கைதனில் அளித்தனைநின் அருட்குறிப்பே தறியேன்
    மலைகடந்த நெடுந்தோளில் இதழிஅசைந் தாட
        மன்றில்நடம் புரிகின்ற வள்ளல் அருட் குருவே.

உரை:

     மலைகளின் மேம்பட்ட திருத்தோளில் கொன்றை மாலை கிடந்து அசைந்தாட, தில்லையம்பலத்தே திருக்கூத் தியற்றுகின்ற வள்ளலாகிய அருட் குருவே, விலையில்லாத செம்மணி போன்று ஒப்பற்ற திருவுருத் தாங்கி வினைகளையுடைய என்முன் எழுந்தருளி, உண்மையன்பர்கள் விரும்புமாறு, கலை முதலிய தத்துவங்கட்கு அப்பாற்பட்ட வைந்தவ காரியப் பொருளையும் கடந்து, நாத தத்துவத்துக்கும் அப்பாலான பெருகிய கருணை நிறைந்த கடைக்கண் பார்த்தருளி, அலையில்லாத கடலிடத்தே பூத்த மணமுடைய மலர் ஒன்றை அடியவனாகிய என் கையிற் கொடுத்தருளினாய்; பெருமானே, நின் திருவருட் குறிப்பை என்னென்று அறிவேன்? எ.று.

     மலைபோன்ற தோள்களை, “மலை கடந்த தோள்” என்கிறார். கடந்த உவமச் சொல்லுருபு. இதழி - கொன்றை. விலை கடந்த மணி - விலைமதிப்பிடலாகாத மாணிக்க மணி. தாம் பெற்றது பிறரும் பெறக் கண்டு மகிழ்வது உண்மையன்பர் இயல்பாதலின், “மெய்யடியர் விரும்ப” என்கின்றார். நிவிர்த்திமுதலிய கலைகளில் அடங்கிய புவனப் பொருள்களை “கலை கடந்த பொருள்” என்கிறார். அவை வைந்தவ மாயையின் காரியம் என உணர்க. நாதக் கதி, சுத்த மாயையின் மத்தகத்தில் உள்ள நாத தத்துவம். தத்துவா தீதத்தைக் குறிப்பதற்கு, “நாதக் கதி கடந்த” எனக் குறிக்கின்றார். அகமும் புறமும் துளும்பி வழிந்துயிர்க்கெல்லாம் களைகண்ணாகும் (அருள். 2070) அருள் நலம் நினைந்து, “பெருங் கருணை கடைக்கண்” எனப் பேசுகின்றார். ‘அலை கடந்த கடல்’ அலையில்லாத கடல் என்றது ஞானச் செழுங்கடல். அதன்கண் நின்று மலர்ந்து மணங்கமழ்வது சிவஞானச் செம்மலர். “ஞான மாமலர் கொடு நணுகுதல் நன்மையே” (காணப். 7) என ஞானசம்பந்தரும் நவில்வர்.

     இதனால், சிவஞானச் செம்மலர் அளித்தமை கூறியவாறாம்.

     (4)