3164.

    உலர்ந்தமரந் தழைக்கும்ஒரு திருஉருவந் தாங்கி
        உணர்விலியேன் முன்னர்உவந் துறுகருணை துளும்ப
    மலர்ந்தமுகம் காட்டிநின்று திருநீற்றுப் பையை
        மலர்க்கரத்தால் அவிழ்த்தங்கு வதிந்தவர்கட் கெல்லாம்
    அலாந்ததிரு நீறளித்துப் பின்னர்என்றன் கரத்தில்
        அருள்மணப்பூ அளித்தனைநின் அருட்குறிப்பே தறியேன்
    கலந்தவரைக் கலந்துமணிக் கனகமன்றில் நடஞ்செய்
        கருணைநெடுங் கடலேஎன் கண்அமர்ந்த ஒளியே.

உரை:

     தன் திருவருளிற் கலப்பவரைத் தான் கலந்து மணியிழைத்த பொன்னம்பலத்தில் திருநடம் புரிகின்ற கருணையாகிய நெடிய கடலாகியவனே, என் கண்கட்கு ஒளியாகியவனே, பட்டொழிந்த மரமும் கண்ட மாத்திரையே தழைத் தோங்குவிக்கும் அழகிய திருவுருவுக் கொண்டு நல்லுணர்வில்லாத என் முன்பு மனமுவந்து கருணை நிறைந்து வழியத் தனது மலர்ந்த முகத்தைக் காட்டி நின்று திருநீற்றுப் பையை மலர் போன்ற கையா லவிழ்த்து அங்கே சூழ இருந்தவர் அனைவருக்கும் வெண்மையான திருநீற்றைக் கொடுத்து பின்பு என் கையில் சிவஞானம் மணக்கும் பூ வொன்றை அருளினாய்; நின் திருவுள்ளக் குறிப்பு யாதோ அறியேன். எ.று.

     திருவருட் சிவஞானத்தில் தோய்த்து கலந்தவரைச் சிவமாக்குபவனாதலால், “கலந்தவரைக் கலந்து” எனக் கூறுகின்றார். கனகமன்று - பொற்சபை. கண்ணுள் அமர்ந்த ஒளியே என்றாரேனும், கண்ணிலுள்ள மணியின் ஒளியாயிருப்பவன் என்பது கருத்தாகக் கொள்க. உலர்ந்த மரம் - பசையின்றிப் பட்ட மரம். “பட்ட மரம் தழைத்திட நகைக்கும் முறுவல்” (அரிச்சந்) எனப் பிறரும் கூறுவது காண்க. உணர்விலி, நல்லுணர்வு இல்லாதவன். மனம் உவகையுற்ற வழிக் கருணை சுரந்து நிறைந்து வழிவது புலப்பட, “உறுகருணை துளும்ப” என்கிறார். முகம் போலக் கையும் தாமரை மலர் போல் அமைந்து, விளங்குதல் பற்றி, “மலர்ந்த முகம் காட்டித் திருநீற்றுப் பையை மலர்க் கரத்தால் அவிழ்த்து எனவுரைக்கின்றார். வதிந்தவர் - கூடியிருந்த அன்பர்கள். வெள்ளைத் திருநீறு மலர்ந்த வெண்மலர் போலுதலால், “அலர்ந்த திருநீறு” எனக் கூறுகிறார். தனக்குக் கொடுத்த பூவைத் திருவருள் ஞானமாகக் கருதுகின்றாராகலின், “அருள் மணப்பூ அளித்தனை” என வுரைக்கின்றார். தமது கருத்து இறைவன் திருவுள்ள மாகுமோ என ஐயுறுகின்றமை புலப் பட, “நின் அருட் குறிப்பேது அறியேன்” எனமொழிகின்றார்.

     இதனால், குருபரன் அளித்த மலரைத் திருவருள் ஞானமாகக் கருதினமை வுரைத்தவாறாம்.

     (5)