3165.

    பிழைஅலதொன் றறியாத சிறியேன்முன் புரிந்த
        பெருந்தவமோ திருவருளின் பெருமையிதோ அறியேன்
    மழைஎனநின் றிலகுதிரு மணிமிடற்றில் படிக
        வடந்திகழ நடந்துகுரு வடிவதுகொண் டடைந்து
    விழைவினொடென் எதிர்நின்று திருநீற்றுக் கோயில்
        விரித்தருளி அருண்மணப்பூ விளக்கம்ஒன்று கொடுத்தாய்
    குழைஅசையச் சடைஅசையக் குலவுபொன்னம் பலத்தே
        கூத்தியற்றி என்னைமுன்னாட் கொண்டசிவக் கொழுந்தே.

உரை:

     விளங்குகிற பொன்னம்பலத்தின்கண், காதிலணிந்த குழையாட முடியிலுள்ள சடையாட, திருக்கூத்தாடி என்னை முன்பே ஆட் கொண்ட பெருமானாகிய சிவக் கொழுந்தே, குற்றங்களையன்றிப் பிற நலம் யாதும் செய்தறியாத சிறுவனாகியயான் முற்பிறவியிற் செய்த பெருந்தவமோ, நினது திருவருளின் பெருமைத் தன்மையோ, யாதோ அறியேன்; மழை மேகம் போல் கரிய நிறம் கொண்டு, விளங்குகின்ற நின்னுடைய திருக்கழுத்தில் படிக மாலை அணிந்து கொண்டு, எனபால் குருமூர்த்தமாய் அன்புடன் வந்து எதிரே நின்று, திருநீற்றுப் பையைத் திறந்து அருண் மணம் கமழும் பூ வொன்றை விளக்கமுறக் கொடுத்தருளினாய்; நின் பேரருளை என்னென்பேன். எ.று.

     ஒரு காதில் தோடும் ஒரு காதிற் குழையு மணிந்தாடுவது இயல்பாதலின் “குழையை” விதந்து, “குழையசைய” எனக் கூறுகின்றார். “தோடொரு காது ஒரு காது குழை சேர்ந்த குழையான்” (நாரையூ) எனத் திருஞானசம்பந்தர் உரைப்பது காண்க. இடக்காதில் தோடு செறிப்புண்டும் வலக்காதிற் குழை தாழ்ந்து தொங்கிக் கொண்டுமிருத்தலால் கூத்தாடுங்கால் குழை யசைந்தாடும் என அறிக. சடைகளும் முடியில் விரிந்து தாழ நீண்டிருப்பதால் “சடையசைய” எனவுரைக்கின்றார். முன்பு அத்திருக்கூத்தைக்கண்டு ஆட்பட்டமை புலப்பட, “என்னை முன் ஆட்கொண்ட சிவக்கொழுந்தே” என இயம்புகிறார். சிறுமையுடையவனாதலால் குற்றமே செய்தேன் எனபாராய், “பிழையற தொன்றறியாத சிறியேன்” என்றும், எனக்கு இத் திருவருள் எய்துவதற்குக் காரணம் ஒன்று என்னுடைய முற்பிறவிகளிற் செய்த நற்றவமாதல் வேண்டும்; அல்லது, நின்னுடைய திருவருளின் பெருந்தன்மையாதல் வேண்டும்; யாதாயினுமாதல் வேண்டும் என்றற்குச் “சிறியேன் முன் புரிந்த பெருந்தவமோ, திருவருளின் பெருமையோ, இது அறியேன்” எனக் கூறுகின்றார். அழகிய திருக்கழுத்து, மழைமேகம் போல்கின்ற தென்பாராய், “மழையென நின்று இலகுதிருமணி மிடறு” எனப் புகழ்கின்றார்.

     மணி - ஈண்டு அழகு குறித்தது. படிக வடம், படிகமணிமாலை. கரிய கழுத்தில் வெண்ணிற வொளியுடைய படிகமாலை கிடத்து ஒளிர்ந்து அழகு செய்தலின், அதனை எடுத்தோதுகின்றார். குருவடிவம் - கண்டார் வணங்கத் தக்க ஞானாசிரியவுருவம், திருநீறு உள்ள சிறு பையைத் திருநீற்றுக் கோயில் என்பது சைவ மரபு. பூவின் நறுமணத்தைச் சிறப்பிக்க “அருள் மணப் பூ” என ஓதுகின்றார்.

     இதனாற் பூவளித் தருளியதற் கேது நினைந்து பரவியவாறாம்.

     (6)