3166.

    முத்தேவர் அழுக்காற்றின் மூழ்கியிடத் தனித்த
        முழுமணிபோன் றொருவடிவென் முன்கொடுவந் தருளி
    எத்தேவர் தமக்குமிக அரியஎனும் மணப்பூ
        என்கரத்தே கொடுத்தனைநின் எண்ணம்இதென் றறியேன்
    சித்தேஎன் பவரும்ஒரு சத்தேஎன் பவரும்
        தேறியபின் ஒன்றாகத் தெரிந்துகொள்ளும் பொதுவில்
    அத்தேவர் வழுத்தஇன்ப உருவாகி நடஞ்செய்
        ஆரமுதே என்னுயிருக் கானபெருந் துணையே.

உரை:

     பரம்பொருள் என்பது ஒரு சித்துப் பொருள் என்பவரும் சத்துப் பொருள் என்பவருமாகிய இருதிறத்தாரும் தெளிவுற்ற போது இரண்டுமொன்றே எனத் தெரிந்து கொள்ள விளங்கும் தில்லையம்பலத்தின் கண் அந்தத் தேவர் பலரும் துதிக்க இன்ப வுருக்கொண்டு கூத்தாடுகின்ற அரிய அமுதம் போல்பவனே, எனது உயிருக்கு அருமை வாய்ந்த பெரிய துணைவனே; பிரமன் முதலிய தேவர் மூவரும் அழுக்காறு கொள்ள தனித் தகுதியுடைய முழுத்த மாணிக்கமணி போன்று ஒரு வடிவெடுத்து என் முன் போந்து எத்தகைய தேவர்கட்கும் எய்த முடியாதது என்னும் மணமிக்க பூ வொன்றை என் கையிற் கொடுத்தருளினாய்; நின் திருவுள்ளம் இத்தன்மையது என அறியா தொழிந்தேன்; எனது அறியாமையை என்னென்பது. எ.று.

     பரம்பொருளின் தன்மை நினைந்து கூறும் தலைவரகளில் சிலர் சத்து என்பதும் சிலர் சித்து என்பதுமாயுள்ளனர்; அவர்கள் தில்லையம்பலத்தில் நின் திருக்கூத்தைக் காணில், சிவ பரம்பொருள் சத்தாயும் சித்தாயும் இன்பமாயும் உள்ள தெனத் தெளிகின்றனர் என்பார். “சித்தே என்பவரும் ஒருசத்தே என்பவரும் தேறிய பின் ஒன்றாகத் தெரிந்து கொள்ளும் பொதுவில் இன்ப வுருவாகி நடஞ்செய் ஆரமுதே” என்று கூறுகின்றார். சித்து - அறிவுருவாயது; சத்து - மெய்ம்மை யுருவாயது. தேறுதல் - பிணக்கு நீங்குதல், சச்சிதானந்த வுருவாகிய கூத்தப் பெருமானைக் கண்டதும் இதுவே பரம்பொருள் எனத் தெளிந்து வழிபடுகின்றனர் என்றற்கு “அத்தேவர் வழுத்த” எனக் கூறுகின்றார். அகரச் சுட்டு அங்ஙனம் ஒருமருங்கு கண்டு பிணங்கிய தேவர்களைக் குறிக்கிறது. உயிக்குயிராய் நின்று துணை செய்தல் பற்றி, “என் உயிருக்கான பெருந் துணையே” எனப் பேசுகின்றார். பிரமன் முதலிய தேவர்கள் பிறர் ஆக்கம் காணப்பொறாத குற்றமுடையவ ரல்லராகலின், “அழுக்காற்றில் மூழ்கியிட” என்றற்கு மிக்க வியப்படைய எனப் பொருள் செய்தல் வேண்டும். ஒருவகைக் குற்றமில்லாத மாணிக்க மணி யென்றற்குத் “தனித்த முழு மணி” எனச் சாற்றுகின்றார். செம்மேனி யம்மானாதலின் இவ்வாறு கூறுகின்றார். எத்தேவர், எப்பெற்றியராகிய தேவரும். ஞான தேசிகன் தந்த சிவஞானப் பூவின் சிறப்புணர்த்தற்கு, “எத்தேவர் தமக்கு மிக அரியவெனும் மனப் பூ” எனவுரைக்கின்றார். திருநீறளிக்காமல் மலர் கொடுத்த குறிப்பு ஞானக் கொடை கருதிற்று என அறிந்தேன் என்பாராய், நின் வண்ணம் இதுவென அறியேன்” என்று மொழிகின்றார்.

     இதனால், மலர்க் கொடை சிவஞானக் கொடை யென வுணர்ந்தமை கூறியவாறாம்.

     (7)