3167.

    தெள்ளமுதம் அனையஒரு திருஉருவந் தாங்கிச்
        சிறியேன்முன் எழுந்தருளிச் செழுமணப்பூ அளித்தாய்
    உள்ளமுதம் ஆகியநின் திருக்குறிப்பே துணரேன்
        உடையவளை உடையவனே உலகுணரா ஒளியே
    கள்ளமிலா அறிவாகி அவ்வடுவுக் கறிவாய்க்
        கலந்துநின்ற பெருங்கருணைக் கடலேஎன் கண்ணே
    கொள்ளுதொறும் கரணமெலாங் கரைந்துகனிந் தினிக்கும்
        கொழுங்கனியே கோற்றேனே பொதுவிளங்குங் குருவே.

உரை:

     உலகனைத்தும் உடையவளாகிய உமாதேவியை ஒரு கூறாக வுடையவனே, குற்றமில்லா அறிவாயும், அந்த அறிவுக் கறிவாகியும் உயிரறிவோடு கலந்து நிற்கின்ற கருணைப் பெருங் கடலே, எனக்குக் கண்ணாயிருப்பவனே, அறிவிற் கொள்ளும் போதெல்லாம் மன முதலிய கரணங்கள் யாவும் கரைந்து இனிமை நல்கும் கொழுவிய கனி போன்றவனே, கொம்புத் தேனாயவனே, அம்பலத்தின்கண் கூத்தப் பெருமானாய் விளங்கும் குருபரனே, தெளிந்த அமுதம் போன்ற ஒரு திருமேனி கொண்டு சிறியவனாகிய என் முன்பே போந்து செழித்த மணம் கமழும் பூ வொன்றைக் கொடுத்தருளினாய்; என் உள்ளத்துக்கு அமுதம் போன்ற நினது திருவுளக் குறிப்பு இன்னதெனத் தெளிகிலேன். எ.று.

     உலகனைத்தையும் உடையதாகிய மாயையைத் தான் உடையவளாகலின், உமையம்மையை “உடையவள்” எனவும், அவளைத் தன் திருமேனியில் ஒரு கூறாகவுடையனாதலின், சிவனை, “உடையவளை யுடையவனே” எனவும் உரைக்கின்றார். மறைக்கப்படுவது குற்றமாகலின், அதனைக் “கள்ளம்” என்றும், அஃதில்லாத தூய அறிவைக் “கள்ளமிலா அறிவு” என்றும் கூறுகிறார். தூய அறிவுருவாகியும், அவ்வறிவுக் கறிவாகியும் விளங்குதலால், “அவ்வறிவுக்கு அறிவாகி” என்றும், உயிரறிவிற் கலந்து நிற்றலால் “கலந்து நின்ற கருணைக் கடலே” என்றும் இயம்புகின்றார். அறிவுக் கறிவு அருள் மயமாதல் புலப்படப் “பெருங் கருணைக் கடலே” என்கிறார். சிறந்த கருவியாதலின் “என் கண்ணே” எனக் கூறுகிறார். உள்ளுகின்ற உள்ளத்தில் தோய்த்து நினைக்கின்ற மன முதலிய கரணங்கள் நீராய் உருகி இனிமைச் சுவை நல்குதலால், “கொள்ளுதொறும் கரணமெலாம் கரைந்து கனிந்து இனிக்கும் கொழுங்கனியே” என்று உரைக்கின்றார். கோற்ேீறன் - மரக் கிளைகளிற் கட்டுகிறது; இது ஏனைத் தேன்களிற் சுவை மிக வுடைய தென்பர். பொது - தில்லையம்பலம். திருமேனி காணும் கண்ணுக்கு இனிதாதல் தோன்ற, “தெள்ளமுதம் அனைய ஒரு திருவுருவம் தாங்கி” எனவும்,. திருநீற்றுப் பைக்குள் அடைத்திருந்த போதும் மணம் குறையாது மிக்கிருந்தமையால் “செழுமணப் பூ” எனவும் இயம்புகின்றார். மானதக் காட்சிக்கண் அமுதமாய் இருந்தமையின், “உள்ளமுதமாகிய நின்” என்றும், நின் கருத்தை அறியேனாயினேன் என்பார், “திருக்குறிப்பு ஏது உணரேன்” என்றும் இசைக்கின்றார். சிறப்பும்மை தொக்கது.

     இதனால், திருக்குறிப் பறியாமை எடுத்தோதியவாறாம்.

     (8)