3168.

    கண்விருப்பங் கொளக்கரணங் கனிந்துகனிந் துருகக்
        கருணைவடி வெடுத்தருளிக் கடையேன்முன் கலந்து
    மண்விருப்பங் கொளுமணப்பூ மகிழ்ந்தெனக்குக் கொடுத்து
        வாழ்கஎன நின்றனைநின் மனக்குறிப்பே தறியேன்
    பெண்விருப்பந் தவிர்க்கும்ஒரு சிவகாம வல்லிப்
        பெண்விருப்பம் பெறஇருவர் பெரியர் உளங் களிப்பப்
    பண்விருப்பந் தருமறைகள் பலபலநின் ேீறத்தப்
        பரமசிதம் பரநடனம் பயின்றபசு பதியே.

உரை:

     ஒருகால் கண்டார்க்குப் பெண்ணாசையே மனத்தின்கண் எழாமற் போக்கும் சிவகாம வல்லியாகிய தாயின் திருவருள் பெறற் பொருட்டுப் பெரியவர் இருவருடைய மனம் விரும்பவும், பண்ணிசையமைந்த பலவாகிய வேதங்கள் ஒருபால் நின்று முறையாக ஓத பரம சிதம்பர நடனத்தைப் புரிகின்ற பசுபதியே, காணும் கண்கள் மேலும் காண்டலை விரும்ப, ஏனைக் கருவி கரணங்கள் கரைந்து மிகக் கனிந்து உருக, கருணையே திருமேனியாகக் கொண்டு கடையவனாகிய என் முன்பு போந்து மண்ணக மக்கள் விரும்புகின்ற ஞான மணங் கமழும் மலரைக் கொடுத்து, நீடு வாழ்க என்று உரைத்தருளிய நின் திருவுள்ளம் யாதோ, அறியேன். எ.று.

     பெண் விருப்பம் - பெண்களின் மேல் உளதாகும் காம விச்சை சிவகாமி யென்னும் உமாதேவியைக் காண்பார்க்குப் பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசையாகிய மூவாசைகளும் கெட்டொழிதலால், “பெண் விருப்பம் தவிர்க்கும் ஒரு சிவகாமல்லி” என்று கூறுகின்றார். உலகனைத்தையும் பெற்ற தாயாகலின், உமாதேவியைச் “சிவகாமவல்லிப் பெண்” என்றும், அவளது பேரருள் பெறற் குரியதாகலினாலும், அவளருளால் முனிவரும் சிவயோகிகளும் தத்தம் தவமும் யோகமும் கைவரப் பெறுகின்றனராதலாலும், “வல்லிப் பெண் விருப்பம் பெற” என்றும் பேசுகின்றார். இருவர் பெரியர், பதஞ்சலி, வியாக்கிரபாதர். இவருள் பதஞ்சலி பாம்பின் காலும் மற்றவர் புலிக் காலும் உடையர். வேதங்கள் கீத விசை கொண்டு ஓதப்படுவது பற்றி, “பண் விருப்பம் தருமறைகள்” எனச் சிறப்பிக்கின்றார். சிதம்பர நடனம் - ஞானவாகாயத்தில் நிகழும் திருக்கூத்து. எதிரே வந்து நின்ற சான்றோர் திருமேனி காண்பார் கண்களாகிய கருவி தன்னையே கண்டு மகிழும்படி காட்சி யாசையில் தோய்வித்தல் விளங்க, “கண் விருப்பம் கொள” என்றும், மன முதலிய கரணங்கள் இன்ப அன்பாற் கனிந்து கரைந்து உருகச் செய்தமையின் “கரணம் கனிந்து கனிந்து உருக” என்றும் இசைக்கின்றார். மண், ஆகு பெயராய் மக்கட் காயிற்று. மணப் பூ - நறிய ஞான மணம் கமழும் பூ. கையால் மலரை எடுத்துக் கொடுத்தவர். உவகை மிக்கு இதனைப் பெறும் நீ நீடு வாழ்க என வாழ்த்தின ரென்பார், “வாழ்க என நின்றனை” எனக் கூறுகின்றார். வாழ்த்தியதன் கருத்து விளங்காமையால், “நின் மனக்குறிப்பு ஏதும் அறியேன்” என மொழிகின்றார்.

     இதனால், திருமேனியால் மனம் கவர்ந்து பூக் கொடுத்து வாழ்த்தினமை கூறியவாறாம்.

     (9)