3169.

    உன்னுதற்கும் உணர்வதற்கும் உவட்டாத வடிவம்
        ஒன்றெடுத்து மெய்யன்பர் உவக்கஎழுந் தருளி
    முன்னுதற்கோர் அணுத்துணையுந் தரமில்லாச் சிறியேன்
        முகநோக்கிச் செழுமணப்பூ முகமலர்ந்து கொடுத்தாய்
    துன்னுதற்கிங் கரிதாம்நின் திருஉள்ளக் குறிப்பைத்
        துணிந்தறியேன் என்னினும்ஓர் துணிவின்உவக் கின்ேீறன்
    பொன்னுதற்குத் திலகமெனுஞ் சிவகாம வல்லிப்
        பூவைஒரு புறங்களிப்பப் பொதுநடஞ்செய் பொருளே.

உரை:

     அழகிய நெற்றிக்குத் திலக மிட்டது போல், பெண் குலத்துக்குத் திலகமாய்த் திகழும் உமாதேவியாகிய சிவகாமவல்லியெனப் பெயர் கூறப்படும் பூவையாகிய எங்கள் தாய், ஒருபால் நின்று பார்த்து மகிழத் தில்லையம்பலத்தின்கண் திருக்கூத்தியற்றும் சிவ பரம்பொருளே, நினைப்பதற்கும் மனத்தின்கண் உணர்தற்கும் தெவிட்டாத இனிய திருமேனி கொண்டு மெய்யன்பர்கள் கண்டு மகிழப் போந்தருளி முற்பட எண்ணற் கேற்ற தகுதியில்லாத சிறுமையுடையனாகிய என்னுடைய முகத்தைப் பார்த்து மிக்க மணம் கமழும் பூ வொன்றை முகமலர்ச்சியுடன் எனக்குக் கொடுத்தாய்; நெருங்குதற் கரியவனாகிய நின்னுடைய திருவுள்ளக் கருத்தைத் தெரிந்து கொள்ளேனாயினும் ஒருவகைத் துணிவுடன் மனமகிழ்கின்றேன். எ.று.

           பொன் நுதல் - அழகிய நெற்றி. பூவை - பெண். பூவணிந்து பொலிவது பற்றி மங்கையரைப் பூவை என்பது வழக்கு. உமாதேவி காயாம் பூவின் வண்ண முடையவளாதலின், “பூவை” என்றார் என்றலும் ஒன்று. அம்மை காண அம்பலத் தாடல் பற்றி, “பூவை ஒருபுறம் களிப்பப் பொது நடஞ்செய் பொருளே” என்று கூறுகின்றார். “கூடிய இலயம் சதி பிழையாமைக் கொடியிடை யுமையவள் காண ஆடிய குழகா” (வடமுல்லை) என்று சுந்தரர் பாடுவது காண்க. பொருள் - சிவபரம்பொருள். உன்னுதல், நெஞ்சால் நினைத்தல். உணர்தல் - உள்ளத்தால் உணர்தல். “என்னெஞ்சில் ஈசனைக் கண்ட தென் உள்ளமே” (உள்ளக்) என நாவரசர் உரைப்பது காண்க. உவட்டல், தெவிட்டல். முன்னுதல், முற்பட நினைத்தல், தரமாவது, முன்னுற வுணரும் அறிவுத் திறம். துன்னுதல், நெருங்குதல், துணிதல், ஆராய்ந்தறிதல். துணிவு, மனக்கோள்.

     இதனால், மணமலரை ஏற்றது ஒரு மனத் துணிவாலென உரைத்தவாறாம்.

     (10)