4. ஆனந்த மாலை
அஃதாவது, பாடுதற் கமைந்த மனப் பக்குவத்தால் திருவருள் இன்பத்தைப் பெறும் மகிழ்ச்சி மேலீட்டால் பாடுவது. இதன்கண் வரும் பத்துப் பாட்டிலும் உமையம்மை காண இறைவன் திருநடனம் புரியும் திருவருட் செயல் சிறப்பித்துக் கூறப்படுகிறது.
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் 3170. திருவருடுந் திருவடிப்பொற் சிலம்பசைய நடந்தென்
சிந்தையிலே புகுந்துநின்பாற் சேர்ந்துகலந் திருந்தாள்
தெருமரலற் றுயர்ந்தமறைச் சிரத்தமர்ந்த புனிதை
சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பப்
பொருவருமெய் யன்புடையார் இருவருங்கண் டுவந்து
போற்றமணிப் பொதுவில்நடம் புரிகின்ற துரையே
பருவரல்அற் றடிச் சிறியேன் பெருவரம்பெற் றுனையே
பாடுகின்றேன் பெரியஅருட் பருவமடைந் தனனே.
உரை: திருமகள் தன் கைகளால் மெல்லப் பிடிக்கும் அழகிய திருவடிச் சிலம்பொலிக்க நடந்து, என் சிந்தையிற் புகுந்து, பின் நின்பால் சேர்ந்து கலந்திருப்பவளும், கலக்கமின்றி யுயர்ந்த வேதங்களின் உச்சியில் வீற்றிருக்கும் தூயவளாகிய சிவகாமவல்லி யெனப்படும் உமாதேவியாரின் மனம் மகிழும் படியும், ஒப்பற்ற உண்மை யன்பராகிய பதஞ்சலி, வியாக்கிரபாதர் என்ற இருவரும் நேர் நின்று நோக்கி மகிழ்ந்து போற்றவும், அழகிய அம்பலத்தின்கண் திருநடம் செய்கின்ற பெருமானே, துன்ப மகன்று அடிமைகளிற் சிறியவனான யான் நினது பெரிய வரத்தைப் பெற்று, மனப் பக்குவத்தை யெய்தினேனாகலின், உன்னையே பாடி இன்புறுகின்றேன். எ.று.
பொன், திருமகள். திருமகள், கலைமகள் முதலிய சத்திகள், திருமால், பிரமன் முதலிய மூர்த்தங்கட்கு அமைந்த சத்திகளாதலால் பராசத்தியாகிய உமை யம்மைக்குப் பணி செய்பவர்களாக அமைத்துப் “பொன் வருடும் திருவடி” என்று கூறுகின்றார். உள்ளே பரல் பெய்த சிலம்புகளைச் செல்வ மகளிர் காலில் அணிபவராதலால், “சிலம்பசைய நடந்து” என்றும், தம்பால் நினைக்கப்படுதல் விளங்க, “என் சிந்தையிலே புகுந்து” என்றும், இறைவனைப் பிரியாது உறைபவளாதலின், “நின்பாற் கலந்திருந்தாள்” என்றும் சிறப்பித் தோதுகின்றார். மறைநூல்களில் முடிந்த பொருளாக உரைக்கப்படுவது பற்றி, “உயர்ந்த மறை தெருமரலற்றுச் சிரத்தமர்ந்த புனிதை” என்கின்றார். புனிதனுக்குப் பெண்பால்
புனிதை - புனிதன், தூயவன், தில்லைக் கூத்துப் பெருமானுக்குத் தேவியாமிடத்துச் “சிவகாமவல்லி” என்பது மரபு. சிவகாமியெனப் பெயர் பெறினும், பெரிய பெருமானாகிய சிவபரம்பொருட்குப் பராசத்தி என வற்புறுத்தற்குப் “பெருந்தேவி” என வுரைக்கின்றார். வேதங்கள் அவளுடைய பெருமையைக் கலக்கமின்றித் தெளிந்தமை தோன்றத் “தெருமரலற்று உயர்ந்த மறை” என்று கூறுகின்றார். தெளிவின்றிக் கலங்குதல் வேதங்கட்கு இயல்பு. தெருமரல், கலக்கம். “வேதங்கள் ஐயாவென வோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே” (சிவபு) என மணிவாசகர் ஓதுவது காண்க. மெய்யன்பர் பல்லாயிரவருள் பதஞ்சலியும் வியாக்கிரபாதர் இருவரும் ஒப்பற்ற வுயர்ந்தவர் என்றற்குப் பொருவரும் மெய்யன்புடையார் இருவர்” என்றும், அவ்விருவர் பொருட்டே தில்லையம்பலத்தில் திருநடம் நிகழ்கிற தெனப் புராணம் கூறுதலால், “இருவரும் கண்டுவந்து போற்ற மணிப் பொதுவில் நடம் புரிகின்ற துரையே” என்றும் இயம்புகின்றார். பருவரல், இன்பம். மன வெழுச்சிக்குக் காரணமாதலின், பருவரல் அறுதியும், இனிய பாட்டுக்களைப் பாடுதலின், பெருவரப் பேறும் எடுத்தோதுவாராய், “பருவரலற்று அடிச் சிறியேன் பெருவரம் பெற்று உனையே பாடுகின்றேன்” என்றும், எனவே, எனக்கும் சிவஞானப் பேற்றுக்குப் பரிபாகம் எய்தி விட்டதன்றோ? என எடுத்துரைப்பாராய் “பெரிய வருட் பருவ மடைந்தனனே” எனக் கூறுகின்றார்.
இதனால், திருவருட் பேற்றுக்குப் பரிபாகம் எய்தினமை தெரிவித்தவாறாம். (1)
|