3171.

    சண்பைமறைக் கொழுந்துமகிழ் தரஅமுதங் கொடுத்தாள்
        தயவுடையாள் எனையுடையாள் சர்வசத்தி யுடையாள்
    செண்பகப்பொன் மேனியினாள் செய்யமலர்ப் பதத்தாள்
        சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பப்
    பண்பகர்பொன் அம்பலத்தே ஆனந்த நடஞ்செய்
        பரம்பரநின் திருவருளைப் பாடுகின்றேன் மகிழ்ந்து
    எண்பகர்குற் றங்களெலாங் குணமாகக் கொள்ளும்
        எந்துரைஎன் றெண்ணுகின்ற எண்ணமத னாலே.

உரை:

     பரம்பரனே, சீர்காழிக்குரிய வேதியர் குலத்துச் சிறிய பெருந்தகையாகிய ஞானசம்பந்தர் மனம் மகிழுமாறு ஞான வமுதம் தந்தவளும், தயை பெரிதும் உடையவளும், என்னைத் தனக்கு ஆளாக வுடையவளும், எல்லாவகைச் சத்திகளையு முடையவளும், சண்பகப் பூவின் நிற மமைந்த அழகிய மேனியை யுடையவளும், சிவந்த தாமரை போன்ற திருவடியை யுடையவளுமாகிய சிவகாமவல்லிப் பெருந்தேவியார் கண்டு மனம் மகிழ, வேத கீதங்கள் முழங்குகின்ற தில்லையம்பலத்தே இனபத் திருக்கூத்தாடுகின்ற பரம்பரனாகிய நின் திருவருளைக் களிப்புடன் பாடுகின்றேன்; காரணம், எண்ணிச் சொல்லப்படுகின்ற குற்ற மனைத்தையும் குணமாகக் கொண்டருளும் எங்கள் தலைவன் எனக் கருதுகின்ற கருத்தேயாம். எ.று.

     எம் துரை யென்று எண்ணுகின்ற எண்ணமதனால் நின் திருவருளைப் பாடுகின்றேன் என இயையும். சண்பை, சீர்காழிக்குரிய பெயர் பன்னிரண்டனுள் ஒன்று. சீர்காழியில் பிள்ளைப் பருவத்தில் ஞானசம்பந்தருக்குச் சிவபிரான் அருட் குறிப்பின்படி உமாதேவியார் பொற் கிண்ணத்தில் ஞானப் பால் கொடுத்தருளிய நிகழ்ச்சியை எடுத்தோதுகின்றா ராதலால், “சண்பை மறைக்கொழுந்து மகிழ் தர அமுதம் கொடுத்தாள்” என்று கூறுகின்றார். தயவு, அருள். பராசக்தியாதலின் “சர்வ சத்தி உடையாள்” என்று கூறுகின்றார். சண்பக மலரின் நிறம் உமாதேவியின் நிறம் என்றற்குச் “செண்பகப் பொன் மேனியினாள்” என்று கூறுகின்றார். செய்ய மலர், சிவந்த தாமரை, சிவகாமவல்லியாகிய பெருந்தேவி என இயைக்க. பண், இசை மேற்றாகி வேதியர் பாடும் வேத கீதத்தை உணர்த்துகிறது. பரம்பரன், மேலாய பரம்பொருள். திருவருளை மனமகிழப் பாடுகின்றவர் அதற்குரிய காரணத்தையும் உடன் கூறுகின்றார். செய்யப்படும் குற்றங்களைக் கண்டு காட்டுகின்ற உள்ளத்தால் விளங்குதலின், “எண் பகர் குற்றங்கள்” என இசைக்கின்றார். ஒருவருடைய குற்றத்தை நோக்கும் போது அஃது அவரது இயல்பு என அறியப்படுமிடத்து இரக்கம் உண்டாதலின், அதனை அறிந்தருளுகின்ற இறைவனைக் “குற்றங்கள் எல்லாம் குணமாகக் கொள்ளும் எம் துரை” என்று கூறுகின்றார்.

     இதனால், குற்றத்தைக் குணமாகக்கொள்ளும் நலமறிந்து பாடுகின்றேனெனத் தெரிவித்தவாறாம்.

     (2)