3172.

    அருளுடைய நாயகிஎன் அம்மைஅடி யார்மேல்
        அன்புடையாள் அமுதனையாள் அற்புதப்பெண் ணரசி
    தெருளுடைய சிந்தையிலே தித்திக்கும் பதத்தாள்
        சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
    மருளுடைய மாயையெலாந் தேயமணி மன்றின்
        மாநடஞ்செய் துரையேநின் மன்னருளின் திறத்தை
    இருளுடைய மனச்சிறியேன் பாடுகின்றேன் பருவம்
        எய்தினன்என் றறிஞரெ லாம் எண்ணிமதித் திடவே.

உரை:

     அருள் மிக்க நாயகியும் எனக்கு அம்மையும், அடியவரிடத்தில் அன்பு கொண்டவளும், அமுதம் போல்பவளும், அற்புதமான பெண்ணரசியும், தெளிவு நிறைந்த மனத்தின்கண் தேனூறியினிக்கும் திருவடியை யுடையவளுமான சிவகாமவல்லி யென்னும் பெயரை யுடைய, பெரிய உமாதேவியார் கண்டு மனம் மகிழுமாறு அழகிய அம்பலத்தின்கண் திருக்கூத்து ஆடுகின்ற பெருமானே, அறியாமை யிருள் நிறைந்த மனமுடைமையால் சிறுமை யுற்றவனாகிய யான் மன்னவனாகிய நினது திருவருள் நலங்களைப் பாடுகின்றேன்; என்னைப் பார்க்கும் அறிஞர்கள் யாவரும் திருவருட் பேற்றுக்குரிய பக்குவத்தை எய்தி விட்டேன், என்று நினைத்து என்னை நன்கு மதிக்கின்றார்கள். எ.று.

     தன்னுடைய அடியாரிடத்தில் அன்பும், ஏனை யுயிர்களிடத்தில் “அருளுடைமையும் பற்றி, “அடியார் மேல் அன்புடையாள்” என்றும், அருளுடைய நாயகி” என்றும், அருட் குணத்தாலும் அருஞ் செயல்களாலும் பெண்ணினத்துக்குத் தலைவியாய் இலங்குதலால் “அற்புதப் பெண்ணரசி” யென்றும், சிந்திக்குந் தோறும் திருவருளின்பம் சுரத்தலால்தெருளுடைய சிந்தையிலே தித்திக்கும் பதத்தாள்” என்றும் புகழ்கின்றார். ஞானம் மிக்க சிந்தையிலன்றித் தேனூறுதல் புலப்படாமை பற்றித் “தெருளுடைய சிந்தை” யெனத் தெரிவிக்கின்றார். தெளிந்த வுள்ளத்தையும் மாயா காரியமான உலகியலும் உடம்பும் மயக்குதலால், அந்த மையல் ஒழிதலை வேண்டி இறைவன் அம்பலத்தில் ஆடுகின்ற திருக்குறிப்பை, “மருளுடைய மாயையெலாம் தேய மணி மன்றில் மாநடம் செய்துரையே” எனப் போற்றுகின்றார். மையல் மானிட வியல்பாலும் அனாதி மலப் பிணிப்பாலும் இருண்ட மனமுடையனாகிச் சிறுமையுறுபவன் நான் என்பாராய், “இருளுடைய மனச்சிறியேன்” எனவும், என் சிறுமைக் கெட்டாத பெருமை மிக்கதாயினும் நின் திருவருள் நலத்தை இங்கே பாடுகின்றேன் என்பார். “மன்னருளின் திறத்தைப் பாடுகின்றேன்” என்று கூறுகிறார் என் அறிவு செயல்களைக் காண்கின்ற அறிஞர்கள் திருவருள் ஞானப் பேற்றுக்குரிய பக்குவம் எய்தியுள்ளேன் என்று எண்ணிச் சொல்லுகிறார்களாதலால், எனக்குத் திருவருள் பாலிக்க வேண்டும் என்று இயம்புவாராய், “பருவம் எய்தினனென்று அறிஞரெலாம் எண்ணிமதித்திடப் பாடுகின்றேன்” எனவுரைக்கின்றார்.

     இதனால் பக்குவ மெய்தினமை கூறியவாறாம்.

     (3)