3173.

    மாசுடையேன் பிழைஅனைத்தும் பொறுத்துவர மளித்தாள்
        மங்கையர்கள் நாயகிநான் மறைஅணிந்த பதத்தாள்
    தேசுடையாள் ஆனந்தத் தெள்ளமுத வடிவாள்
        சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பக்
    காசுடைய பவக்கோடைக் கொருநிழலாம் பொதுவில்
        கனநடஞ்செய் துரையேநின் கருணையையே கருதி
    ஆசுடையேன் பாடுகின்றேன் துயரமெலாந் தவிர்ந்தேன்
        அன்பர்பெறும் இன்பநிலை அனுபவிக்கின்றேனே.

உரை:

     குற்றமுடையவனாகிய என் பிழைகள் அத்தனையும் பொறுத்து வரம் அளித்தவளும், பெண்ணினத்துக்கு அரசியாக விளங்குபவளும், நான்காகிய மறைகளை வழங்கிய திருவடியையுடையவளும், ஒளியும் தெள்ளிய அமுதமான திருமேனியுமுடையவளுமான சிவகாமவல்லி யென்னும் பெரிய உமாதேவியார் மனம் மகிழ்வுறுமாறு. குற்றமிக்க பிறவி வெப்பத்துக்கு ஒப்பற்ற தொரு நிழல் செய்யும், தில்லையம்பலத்தின் கண், பெருமை தங்கிய திருக்கூத்தை இயற்றுகின்ற பெருமானே, நினது திருவருள் ஒன்றையே பொருளாக எண்ணிக் கொண்டு, பாடுகின்றேனாகலின், துயர முற்றும் நீங்கி மெய்யன்பர்கள் பெறுகின்ற நிலையையுற்று இன்பம் அனுபவிக்கிறேன். எ.று.

     மாசு, காசு, ஆசு ஆகிய சொற்கள் குற்றமென்னும் ஒருபொருள் குறிப்பவை. படர்கின்ற நிலையிற் குற்றத்தை மாசு என்றும், படிந்திருப்பதைக் காசு என்றும், பெரிது படிந்த நிலையில் ஆசு என்றும் வேறுபாடு காணலாம். குற்றம் படர்தற் கேதுவாக அறிவு திரிந்து பிழை செய்தல் உண்மை பற்றி, “மாசுடையேன்” எனப் பகர்கின்றார். பிறவி குற்றக் கொள்கலன் எனப் பெரியோர்களால் பழிக்கப்படுவது பற்றி, “காசுடைய பவம்” எனவுரைக்கின்றார், ஆசா கெந்தை” என்பது போலத் திருவருளையே பற்றாகக் கொண்டு பாடுகின்றேன் என்பாராய், “ஆசுடையேன் பாடுகின்றேன்” எனக் கூறுகின்றார் எனினும் பொருந்தும். இன்ப நினைவும் செயலும் உண்டாகிற போது துயரம் கெடுதலின், “துயரமெலாம் தவிர்ந்தேன்” எனச் சொல்லுகின்றார். உண்மையன்பு நிலைத்த இன்பம் தருதலின், “அன்பர் பெறும் இன்பநிலை” என்று அறிவிக்கின்றார்.

     இதனால், பாடற் பரிசும் இன்பம் பெறுதலும் கூறி மகிழ்ந்தவாறாம்.

     (4)