3175.

    அறங்கனிந்த அருட்கொடிஎன் அம்மைஅமு தளித்தாள்
        அகிலாண்ட வல்லிசிவா னந்திசௌந் தரிசீர்த்
    திறங்கலந்த நாதமணிச் சிலம்பணிந்த பதத்தாள்
        சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
    மறங்கனிந்தார் மயக்கமெலாந் தெளியமணிப் பொதுவில்
        மாநடஞ்செய் துரையேநின் வண்மைதனை அடியேன்
    புறங்கவியப் பாடுகின்றேன் அகங்கவியப் பாடும்
        புண்ணியரெல் லாம்இவன்ஓர் புதியன்எனக் கொளவே.

உரை:

     அறமாகிய கனியைப் பழுத்தளிக்கும் திருவருளாகிய கொடி போன்ற என் அம்மையும், ஞானமாகிய அமுதத்தை ஞானசம்பந்தர்க் களித்தவளும், அண்டங்கள் அனைத்தையும் பெற்றவளும், சிவானந்தத்தை யுடையவளும், அழகை யுடையவளும், சிறப்பு வகை பலவும் தன்பாற் கொண்ட ஓசையைச் செய்யும் சிலம்பணிந்த திருவடிய யுடையவளுமாகிய சிவகாமவல்லி யெனப்படும், பெரிய உமாதேவியின் உள்ளம் மகிழும்படி அறத்துக்கு மாறான மற வுணர்வுகள் உண்டு பண்ணும் மயக்க வகை யனைத்தும் கெட்டுத் தெளிவு நிலையுண்டாக, அழகிய அம்பலத்தின்கண் பெருமையுற்ற நடனத்தைச் செய்கின்ற, நினது அருள் வளத்தை அடியவனாகிய யான் புறத்தார் நாணித் தலை குனியவும் அகவினத்தாராகிய அன்பர்கள் மனம் மலரவும் என்னைக் காணும் சிவ புண்ணியச் சீலர்கள் இவனொரு புத்தடியான் என்று புகலவும் பாடுகின்றேன், என்னை ஏற்றருள்க. எ.று.

     அறம் வளர்த்த நாயகியாகலின், அம்பிகையை “அறம் கனிந்த அருட்கொடி” எனப் புகழ்கின்றார். “மனையறம் பெருக்கும் கருணையினால் நண்ணும் மன்னுயிர் யாவையும் பல்க நாடு காதலின் நீடிய வாழ்க்கைப் புண்ணிய திருக்காமக் கோட்டத்துப் பொலிய முப்பத்திரண்டறம் புரக்கும்” (குறிப்புத்) எனச் சேக்கிழார் தெரிவிப்பது காண்க. சீர்காழியில் சம்பந்தப் பெருமானுக்கு ஞானப் பால் தந்த வரலாறு “என்னம்மை அமுதளித்தாள்” என்பதில் குறிக்கப்படுகிறது. சகல புவனங்களையும் படைத்தவ ளென்பதனால், “அகிலாண்ட வல்லி” என்று கூறுகிறார். வல்லி, கொடி போன்றவள். ஆனந்தி, ஆனந்தத்தை யுடையவள். சௌந்தரி, சுந்தரி; அழகுடையவள் என்பது பொருள். நாதம், ஓசை, தீது புரியும் பண்பு மறமாதலின், அஃது அறத்திற்கு மாறாய பண்பென்றுரைக்கப்படுகிறது. மயக்கக் குண மிகுதியால் உளதாகலின், “மறங்கனிந்தார் மயக்கமெலாம் தெளிய” எனக் கூறுகிறார். அம்பலத் திருக்கூத்து மயக்க மறுக்கும் மாண்புடைய தென அறிக. வண்மை, அருள் புரியும் வளமை மேற்று. அருள் நெறி நில்லாதாரைப் புறத்தார் என்றலின், அவர்கள் அருணலம் விளக்கும் பாடல்களைக் கண்டும் கேட்டும் நாணித் தலை கவிழுமாறு தோன்றப் “புறம் கவியப் பாடுகின்றேன்” எனவும் அருணெறி விழைந்து போற்றுவோர் அகவினத்தாராய், இப்பாடற் பொருளைக் கண்டும் கேட்டும் மனமகிழ்ந்து முகமலர்ந்து வழிபாடாற்றுதல் தோன்ற, “அகம் கவிய” எனவும், அவர்களைப் “பாடும் புண்ணிய” ரெனவும் புகழ்கின்றார். கவிதல், கவிழ்தல்; அமைதி குறிப்பதுமாம். பாடல் வல்ல அருளாளர் பலர் தோன்றி மக்களை வாழ்வித்திருத்தலால், வள்ளலாரின் பாடல் நலம் வியந்து “இவனோர் புதியன் எனக் கொள” என வுரைக்கின்றார். அடியேன் புறங்கவிய, அகம் கவிய, புதியனெனக் கொள்ளப் பாடுகின்றேன் என இயையும்.

     இதனால், சான்றோர் இவனோர் புதியனென எனக் கொள்ளுமாறு பாடுவது தெரிவித்தவாறாம்.

     (6)