3176.

    உள்ளமுதம் ஊற்றுவிக்கும் உத்தமிஎன் அம்மை
        ஓங்கார பீடமிசைப் பாங்காக இருந்தாள்
    தெள்ளமுத வடிவுடையாள் செல்வநல்கும் பதத்தாள்
        சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பக்
    கள்ளமறுத் தருள்விளக்கும் வள்ளன்மணிப் பொதுவில்
        கால்நிறுத்திக் கால்எடுத்துக் களித்தாடுந் துரையே
    எள்ளலறப் பாடுகின்றேன் நின்னருளை அருளால்
        இப்பாட்டிற் பிழைகுறித்தல் எங்ஙனம்இங் ஙனமே.

உரை:

     சிந்தைக்கண் தேனூறுவிக்கும் உத்தமியும், எனக்கு அன்னையும், பிரணவத்தை இருக்கையாகக் கொண்டு அழகுற வீற்றிருப்பவளும், தெளிந்த அமுதத்தின் வடிவுடையவளும், அன்பர்களுக்குச் செல்வம் தரும் திருவடி கொண்டவளும், சிவகாமவல்லி யெனப்படுபவளுமாகிய உமாதேவி கண்டு மனம் மகிழ, ஆன்மாக்களின் உயிர்க்கண் படிந்திருக்கும் மலவிருளை நீக்கி ஞானம் ஒளிர்விக்கும் வள்ளலாய், மணியிழைத்த அம்பலத்தின்கண் ஒரு காலை ஊன்றி, ஒரு காலை மேலேதூக்கி மகிழ்வுடன் ஆடல் புரியும் தலைவனாகிய பெருமானே, நினது திருவருளைப் பொருளாக வைத்துக் குற்றமில்லாமற் பாடுகின்றேன்; யான் பாடும் இப்பாட்டில் இவ்விடத்தில் பிழை காண்டல் எவ்வாறாம்? எ.று.

     சிந்திப்பார் சிந்தனையில் தேன் பெருக்கி மகிழ்விக்கும் பெருமாட்டியாதலை வற்புறுத்தற்கு, “உள்ளமுதம் ஊற்றுவிக்கும் உத்தமி” எனக் கூறுகின்றார். “கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று, பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்” (சிவபுரா) என மணிவாசகர் ஓதுவது காண்க. அம்மை, தாய். ஓங்காரம், பிரணவம்; பிரணவத்தின் பொருளாய் அதனை இடமாகக் கொண்டிருப்பது பற்றி, “ஓங்கார பீடமிசைப் பாங்காக இருந்தாள்” எனவும், துணிவு தோன்ற இருந்தாள் என இறந்த காலத்தாலும் உரைக்கின்றார். “ஓங்காரத் துட்பொருளை உலகமெல்லாம் பெற்றனை” (ஆனைக்கா) எனத் திருநாவுக்கரசரும், “உய்யவென் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா” (சிவபுரா) என மணிவாசகரும் ஓதுவது காண்க. அன்பர் சிந்தையில் தேனூறிச் சிவஞானம் திகழ வீற்றிருத்தலால், “பாங்காக இருந்தாள்” என்று கூறுகிறார். வடிவு, தோற்றம் செல்வம். திருவருளாகிய செல்வம் தனது இருப்புத் தன்னையுடைய ஆன்மாவுக்கும் தெரியாதபடி மறைந்திருப்பதால் மலவிருளை, கள்ளம் என்று குறிக்கின்றார். “பலரைப் புணர்ந்தும் இருட் பாவைக்கு உண்டென்றும் கணவற்குத் தோன்றாத கற்பு” (திருவருட்) என உமாபதி சிவனார் உரைப்பர். திருவருள் ஞான வொளியாலன்றி இருள் வடிவாய மலம் கெடுதலின்மையின், “கள்ள மறுத்து அருள் விளக்கும் வள்ளல்” என இயம்புகின்றார். திருநடனத்தில் வலக்காலை யூன்றி இடக்காலைத் தூக்கி நின்று ஆடுதலால், “கால் நிறுத்திக் காலெடுத்துக் களித்தாடும் துரையே” என்று சொல்லுகின்றார். எள்ளல், குற்றம்; குற்றம் தோன்றின் பலரும் இகழ்வராதலின், “எள்ளல்” எனப்பட்டது. பாடற் கமைந்த பொருள் இறையருள் என்றற்கு “நின்னருளை” என்றும, அது தானும் அப்பெருமான் அருளாலே அமைவதாதலால், “அருளால்” என்று இசைக்கின்றார். “அருளால் நின்னருளைப் பாடுகின்றே” னென இயையும். இங்ஙனம், இவ்விடம். குற்றமே யில்லாத தூய பரம்பொருளாதலால், அதன் துணையாற் பாடும் பாட்டுப் பிழை படற் கிடமில்லை எனத் தெளிவுறுத்தல் வேண்டி, “இப்பாட்டிற் பிழை குறித்தல் எங்ஙனம்” என வுரைக்கின்றார்.

     இதனால், அருளாற் பிறந்த பாட்டாதலால் பிழையிலாச் சிறப்புடையதெனத் தெரிவித்தவாறாம்.

     (7)