3177. பார்பூத்த பசுங்கொடிபொற் பாவையர்கள் அரசி
பரம்பரைசிற் பரைபரா பரைநிமலை யாதி
சீர்பூத்த தெய்வமறைச் சிலம்பணிந்த பதத்தாள்
சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
ஏர்பூத்த மணிமன்றில் இன்பநடம் புரியும்
என்னருமைத்துரையேநின் இன்னருளை நினைந்து
கார்பூத்த கனைமழைபோல் கண்களின் நீர் சொரிந்து
கனிந்துமிகப் பாடுகின்ற களிப்பைஅடைந் தனனே.
உரை: மங்கையர்க்கெல்லாம் அரசியாக விளங்குபவளும் மிகவும் மேலான ஞான பரதேவதையும், பராபரையும் நிமலையாய் ஆதியாகியவளும், சிறப்புடைய தெய்வத்தன்மை பொருந்திய வேதமாகிய சிலம்பை யணிந்த திருவடியை யுடையவளுமாகிய சிவகாமவல்லி யென்னும் உமாதேவி கண்டு மனம் மகிழ, அழகு மிக்க அம்பலத்தின்கண் இன்பத் திருக்கூத்தை இயற்றும் எனக்கு அரிய துரையே, நினது திருவருளை நினைந்து, கார் மேகம் பொழியும் ஒலிக்கின்ற மழை போற் கண்களினின்றும் நீரைச் சொரிந்து மனம் கனிந்து மிகுதியும் பாடுதலாற் பிறக்கும் மகிழ்ச்சியை அடைகின்றேன். எ.று.
பார், நில முதலாகிய பல கோடி யுலகங்கள். உலகம் அனைத்தையும் பெற்றளிக்கும் தாய் என்பது பற்றி, “பார் பூத்த பசுங்கொடி” என்று பகர்கின்றார். பசிய கொடி போல்வது பற்றி, “பசுங்கொடி” என்றது ஆகுபெயர். பாவை போல்வதால் மகளிரைப் “பாவையர்” என்பது வழக்கு. மங்கையர்க் கரசி என்ற தொடர்க்கு, “மங்கையர்க்குத் தனியரசி” என விளக்கம் செய்வர் சேக்கிழார் பெருமான். பரம்பரம், மிக மேலாயது. சிற்பரை, ஞானத்தால் மேம்பட்டவள். பராபரை, பர அபரை எனப் பிரிந்து மேலும் கீழும் எல்லா மாகிய சிவசக்தி எனப் பொருள்படும். நிமலை, மலமில்லாதவள். நிர்மலா என்பது நிமிலை யென மருவிற்று. ஆதி ஆதி சத்தி. தெய்வமாகப் பேணப்படுதலின், “தெய்வ மறை” எனவும், அவ் வேத வொலியைச் செய்தலால், தேவியின் காற் சிலம்பை, “மறைச்சிலம்பு” எனவும் இயம்புகின்றார். ஏர், அழகு; எழுச்சியுமாம். உயிர் வகையனைத்துக்கும் இன்பம் விளைவிப்பதாகலின், “இன்ப நடம்” என்று சிறப்பிக்கின்றார். கார், கரிய மழை மேகம். ஓசையுடைமை பற்றிக் “கன மழை” என்கின்றார். கனைத்தல், ஒலித்தல். திருவருளையே நினைந்து பாடப் பாடப் பெருகும் மகிழ்ச்சியால் பாடுகின்ற குறிப்பு விளங்கப் “பாடுகின்ற களிப்பை யடைந்தனனே” எனக் கூறுகின்றார். “துருத்தியால் திருந்தடியுளங் குளிர்ந்த போதெலாம் உகந்துகந் துரைப்பனே” (துருத்தி) என ஞானசம்பந்தர் நவில்வது காண்க.
இதனால், திருவருளை நினைந்து பாடப் பிறக்கும் களிப்பைத் தெரிவித்தவாறாம். (8)
|