3178.

    பூரணிசிற் போதைசிவ போகிசிவ யோகி
        பூவையர்கள் நாயகிஐம் பூதமுந்தா னானாள்
    தேரணியும் நெடுவிதித் தில்லைநக ருடையாள்
        சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
    ஏரணியும் மணிமன்றில் இன்பவடி வாகி
        இன்பநடம் புரிகின்ற எம்முடைய துரையே
    தாரணியில் உனைப்பாடுந் தரத்தைஅடைந் தனன்என்
        தன்மையெலாம் நன்மைஎனச் சம்மதித்த வாறே.

உரை:

     குணஞ் செயல்களால் நிறைந்தவளும், ஞானமுரைப்பவளும், சிவபோகத்தையும் சிவயோகத்தையும் உடையவளும், மங்கையர்கட்குத் தலைவியும், ஐம்பெரும் பூதங்களும் தானாகியவளும், தேர்கள் அணியணியாக இயங்கும் நெடிய வீதிகளையுடைய தில்லை நகரையுடையவளுமாகிய சிவகாமவல்லி யெனப்படும் உமாதேவியார் கண்டு மனம் மகிழ அழகு பொருந்திய மணியிழைத்த அம்பலத்தின்கண் இன்ப வடிவுற்று இனிய நடம் புரிகின்ற எங்கள் துரையே, இந்நில வுலகில் உன்னைப் பாடுகின்ற தகுதியைப் பெற்று விட்டேனாதலால் என்னுடைய தன்மைகள் யாவும் நல்லவை யென்று நீ திருவுள்ளம் கொண்டமை எனக்கு விளங்கியவாறாயிற்று. எ.று.

     பூரணம் - நிறைவு. நற்குண நற்செய்கைகளால் குறைவின்றி நிறைந்தவளென்றற்குப் “பூரணி” என்றும், சிவஞானத்தை நல்கி யருளுமாறு புலப்படச் “சிற்போதை” என்றும் இயம்புகின்றார். போதிப்பவனைப் போதன் என்றலின், போதிப்பவளைப் “போதை” எனப் புகல்கின்றார். சிவபோகத்தையும் சிவயோகத்தையும் உடையவளாதலால், சிவபோகியெனவும் சிவயோகிய யெனவும் தெரிவிக்கின்றார். பெண்மை பற்றிப் “பூவையர்கள் நாயகி” எனப்படுகின்றாள். பூவை - பெண். வானாகி வளியாகித் தீயாகி நீராகி நிலமாகி நிற்பது விளங்க, “ஐம்பூதமும் தானானாள்” என்று சாற்றுகின்றார். தேர் - நான்கு சக்கரம் கொண்ட ஊர்தி. போக்குவரவு இனிதின் இயங்க அணியமைந்து செல்வது புலப்பட, “தேரணியும் நெடுவீதித் தில்லை” எனச் சிறப்பிக்கின்றார். ஏர் - அழகு. கூத்தப் பெருமான் திருவுருவம், இன்ப மயமானது பற்றி, “இன்பவடிவாகி” என்றும், எல்லாவுயிரும் இன்பம் எய்தும் பொருட்டுத் திருக்கூத்து நிகழ்தலால் “இன்ப நடம் புரிகின்ற எம்முடைய துரையே” என்றும் இசைக்கின்றார். தாரணி - நிலவுலகம்; இது தரணியென்றும் வழங்கும். தரம் - தகுதி. தன்மை முற்றும் நல்லன வாயினல்லது உயர்ந்த பாடல்களைப் பாடும் பான்மை யுளதாகாததாலும். அது தானும் இறைவன் திருவுள்ளக் கிடக்கையாதலாலும், “பாடும் தரத்தை யடைந்தனன் என் தன்மையெலாம் நன்மையெனச் சம்மதித்தவாறாம்” எனக் கூறுகின்றார்.

     இதனால், இறைவனைப் பாடும் தரம் உளதாவது திருவருளா லெனத் தெரிவித்தவாறாம்.

     (9)