5. பத்தி மாலை
அஃதாவது, இறைவனத் திருவருட் சத்தியிடத்துத் தமக்குளதாகிய பத்தியைப் பாட்டுக்களால் மாலையாகத் தொடுத்துப் பாடுவது. இதன் கண் உள்ள பத்துப் பாட்டும் “இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவக்கொழுந்தே” என்பதை மகுடமாகக் கொண்டு உள்ளன. பெருந்துணை நங்கையொருத்தி முதற்கண் மறுத்த திருவருளைப் பின்னர் வந்து நலங் கூறி வற்புறுத்தித் தந்து நினைந்து வருந்தி்க் கூறும் நிலையில் இப் பத்தி மாலை அமைந்துள்ளது.
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் 3180. அருளுடையாய் அடியேன்நான் அருளருமை அறியேன்
அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
மருளுடையேன் தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே
மகிழ்ந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
தெருளுடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
தெரிகின்ற தாயினும்என் சிந்தைஉரு கிலதே
இருளுடைய சிலையும்இதற் குருகல்அரி தலவே
இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
உரை: இனிய திருக்கூத் தியற்றி, அம்பலத்தின்கண் தனித்து விளங்கும் சிவக் கொழுந்தாகிய பெருமானே, நீ பேரருளுடையவன்; அடியவனாகிய யான் நின்னுடைய அருளின் அருமையைத் தெரியாதவன் அதனால் திருவருள் செய்த போது அறியாமையால் யான் மறுத்த குற்றங்களை யெல்லாம் பொறுத்தருளி, மருட்சி மிக்க என்னை அழைத்து மீளவும் என் கையில் அன்புகூர்ந்து அதனை வழங்கிய உனது பெரிய கருணைத் திறம் என்னுடைய மனத்தையும் தெளிவுடைய, கண்களையும் விட்டு நீங்காமல் இப்பொழுதும் தெரியவுளது; அற்றாகவும், என் உள்ளம் அதன் பொருட்டு உருகுகிற தில்லை; இருட் பண்புடைய கல்லும் உருகா தொழியாது காண். எ.று.
அருளையே திருமேனியாக வுடையனாதலால் சிவனை “அருளுடையாய்” என்று கூறுகின்றார். அடியேன், கீழ்ப்பட்டவன். அருளின் நற்பெருமையைச் சிறிதும் அறியாதவன் என்றற்கு “அருளருமையறியேன்” என்று உரைக்கின்றார். முன்பு ஒருகால் நீயே என் முன்னே போந்து நினது அருளை வழங்கினை; உண்மை யறியும் திறமில்லாமையால் அதனை மறுத்துக் குற்றப் பட்டேனாக. நீயோ அக்குற்றத்தைப் பொறுத்தருளினாய் எனப் புகல்கின்றவர், “அறியாது மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து” என மொழிகின்றார். மலமாயைகளால் தமது அறிவு மருண்டமை விளங்க, “மருளுடையேன்” என இசைக்கின்றார். மருட்சியால் மறுத்தொழிந்த என்னை விடாது மீட்டும் போந்து என் கையைப்பற்றி, முகமலர்ந்து உவந்து செய்தருளிய அருட் பண்பை மறவேன்; என் கண் முன்னே அது காட்சி தந்தவண்ணம் இருக்கிற தென்பாராய், “எனையழைத்துத் திரும்பவும் என் கரத்தே மகிழ்ந் தளித்த பெருங் கருணை வண்ணம் என்றன் மனமும் கண்களும் விட்டு அகலாதே இன்னும் தெரிகின்றது” எனக் கூறுகின்றார். மருளுடைமையால் மனம் மறுத்துக் குற்றப்பட்டதாயினும், கண்கள் தெளிவுக் காட்சி யுற்று இன்னும் கண்டு கொண்டுள்ளது என்றற்குத் “தெருளுடைய கண்கள்” என்று சிறப்பிக்கின்றார். இதனைச் சிந்தித்து உருக வேண்டிய சித்த மென்னும் கரணம் அதனைச் செய்கிற தில்லை யென வருந்துகின்றமையின், “என் சிந்தையுருகிலது” எனவும், இவ்வருட் செயற்குக் கருங்கல்லும் உருகும் என்பாராய், “சிலையும் இதற்கு உருகல் அரிதலவே” எனவும் இயம்புகின்றார். “ஆயினும்” என்றது, கருணைத் திறத்தின் பெருமையையும், கருணை நீங்காமல் மனத்தைப் பிணிக்கவும், மனத்தின் கூறாகிய சித்த முருகுகின்றதில்லை என்ற வருத்தத்தையும் வற்புறுத்துகிறது. அறிவில்லாததாகலின், கல்லை, “இருளுடைய சிலை” என்று கூறுகிறார். உயிர் வகை யாவற்றிற்கும் இன்பம் விளைவிப்பதாகலின், இறைவன் திருக்கூத்தை “இனித்த நடம்” எனவும், அது நிகழ்த்தும் திருவுடைய அம்பலத்தின் கண் கூத்தப் பெருமானுடைய திருவுருவம் சிவம் பொலிந்து மேம்படுவது தோன்ற, “மன்றில் தனித்த சிவக்கொழுந்தே” எனப் போற்றுகின்றார். சிவத் திருமேனியிற் பிரிந்து சிவகாமவல்லியாய்க் கண்டு போற்றி மகிழ்தலால், உமையின் கூறின்றித் தனித்துக் காண நிற்பது பற்றித் “தனித்த சிவக் கொழுந்து” எனக் குறிக்கின்றார். ஏனை யிடங்களிலும் இதனையே கூறிக் கொள்க.
இதனால், கருணைத் திறம் நினைந்து, சிந்தை யுருகாமைக்கு வருந்தியவாறாம். வரும் பாட்டுக்கட்கும் இதுவே கருத் தென்க. (1)
|