3181.

    அன்புடையாய் அடியேன்நான் அருளருமை அறியேன்
        அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
    வன்புடையேன் தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே
        வலிந்தளித்த பெருங்கருணை வண்ணஎன்றன் மனமும்
    இன்புடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
        விளங்குகின்ற தாயினும்என் வெய்யமனம் உருகா
    என்புடைய உடலும்இதற் குருகல்அரி தலவே.
        இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.

உரை:

     உயிர்களுக் கெல்லாம் இன்பம் விளைவிக்கின்ற திருநடனம் புரிந்தருளும் தனிப்பெருந் தெய்வமான சிவபெருமானே, அன்புருவானவனே, அடியவனாகிய நான் உன்னுடைய திருவருளின் அருமை பெருமைகளை நன்றாக அறிந்திலேன்; அறியாமையால் உனது திருவருளை மறுத்து, யான் செய்த பிழைகள் அத்தனையும் பொறுத்து, வன்புடையவனாகிய என்னைத் தன் முன் வருவித்து என் கையில் திருவருளை வலியத் தந்தளித்த உனது பெரிய கருணைத் திறம் என் மனத்தையும் இன்புறுவிக்கும். என் கண்களையும் விட்டு நீங்காமல், இப்பொழுதும் விளங்கித் தோன்றுகிறதாயினும் எனது வெவ்விய மனம் உருகாமல் என்பு தோல் போர்த்த உடம்பும் உருகுகிறதில்லை. எ.று.

     தான் அன்புருவாவதன்றி உயிர்த் தொகைகளின் அன்பனைத்தும் தனக்கு உடைமையாகக் கொண்டவனாதலின், “அன்புடையாய்” என்று கூறுகிறார். மக்களிற் கடையனாதலின் நான் உனது திருவருளின் அருமையை யுணரேன் என்பார், “அருளருமை யறியேன்” என வுரைக்கின்றார். “அருளே யுலகெல்லாம் ஆள்விப்பது ஈசன், அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே, மெய்ப்பொருளைக் காணும் விதியுடையேனாதலினால், எப்பொருளும் ஆவதெனக்கு” (திருவா) எனக் காரைக்காலம்மையார் கூறுவதறிக. பிழை பொறுக்கப் படாவிடில் மீளவும் அருள் வழங்கல் நிகழாமை பற்றி, “அறியாதே மறுத்த பிழை யத்தனையும் பொறுத்துத் திரும்பவும் என் கரத்தே அளித்த பெருங்கருணை” என இசைக்கின்றார். மறுத்தமைக்கு மனத்தின்கண் உற்ற வன்கண்மையை எடுத்துரைக்கலுற்று, “வன்புடையேன்” எனத் தம்மைக் கூறுகிறார். வன்பு- வன்கண்மை. “வலிந்தளித்த பெருங்கருணை” என்பதால், திரும்பவும் போந்து அருள் வழங்கிய காலையும் வன்பு நீங்காமை பெறப் படுகிறது. கருணையின் பெருமை மனத்தினும், அருளிய திருவுருக் கண்களிலும் நிலைபேறு கொண்டமை விளங்க, “என்றன் மனமும் கண்களும் விட்டகலாதே இன்னும் விளங்குகின்றது” என வுரைக்கின்றார். அருள் வழங்க வந்த திருமேனி இன்பம் சிறக்கப் பொலிந்தமை பற்றி, “இன்புடைய கண்கள்” எனப் புகழ்கின்றார். கருணைத் திறம் கருத்திலும் கண்ணிலும் நிலைபெற்ற பின்னரும் நினைந்து உருகாமைக்கு வருந்துகின்றாராகலின், “என் வெய்ய மனம் உருகாது; என்புடைய உடலும் உருகல் அரிதலவே” என மொழிகின்றார். உருகாமைக்கு வெகுள்கின்றமை புலப்பட, “வெய்ய மனம்” என்றும், “என்புடைய உடல்” என்றும் விதந்து கூறுகின்றார்.

     (2)