3182. ஆளுடையாய் சிறியேன்நான் அருளருமை அறியேன்
அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
வாளுடையேன் தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே
வலிந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
நீளுடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
நிகழ்கின்ற தாயினும்என் நெஞ்சம்உரு கிலதே
ஏளுடைய மலையும்இதற் குருகல்அரி தலவே
இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
உரை: இன்பம் விளைவிக்கும் திருநடனத்தைச் செய்தருளும் தனிப் பெரும் சிவக்கொழுந்தாகிய பெருமானே, உயிர் வகைகளை ஆண்டருளும் உரிமை யுடையவனே, அறிவிற் சிறுமை யுற்றவனாதலால் நினது திருவருளின் பெறலருமையை அறியா தொழிந்னே்; அதனால் அருளைப் பெற மறுத்தொழுகிய குற்ற மனைத்தையும் பொறுத்தருளிக் கூரியவாள் போன்ற என்னை அருகிலழைத்து மீட்டும் என் கையில் வற்புறுத்தித் தந்த கருணைப் பெருநிலை என்னுடைய மனத்தினும் நீண்ட கண்ணினும் நீங்காமல் இப்பொழுதும் நிலவுகின்றதாகலின், உருகுதற்குரிய என் நெஞ்சம் உருகுகிறதில்லை; ஏழாகிய மலைகளும் இதற்கு உருகா தொழியா; என் செய்வேன். எ.று.
ஆளுடையாய் - ஆளும் உரிமை யுடையவனே. “ஆள வுடையார்” (சண்டே) என்று சேக்கிழார் சிவபெருமானைக் குறிப்பது நோக்குக. சிறியேன் என்பதிற் சிறுமை அறிவின் மேற்று. சிறுமை, திருவருளின் அருமை யறியாமைக்கு ஏதுவாயிற்றென அறிக, மறாத ஏற்றக் கோடற்கரியதனை மறுத்தல் குற்றமாகலின், “மறுத்த பிழை” என்கின்றார். நெருங்குதற்காகாத கொடுமையுடைமை புலப்படத் தம்மை, “வாளுடையேன்” என வடலூர் வள்ளல் உரைக்கின்றார். வலிந்தளித்தல் - மறாதபடி வற்புறுத்தி ஏற்பித்தல். நீண்ட பார்வை யுடையவையாகலின், கண்களை “நீளுடைய கண்கள்” என விளம்புகின்றார். பெருங்கருணை நிலைபேறு கொண்ட தென்பார், “இன்னும் நிகழ்கின்றது” எனக் கூறுகின்றார். ஆயினும் என்பது ஆகவும் - என்பதன் திரிபு. ஏழ் - ஏள் என வந்தது. ழகர ளகரப் போலி. (3)
|