3183. ஆரமுதே அடியேன்நான் அருளருமை அறியேன்
அறியாதே மறுத்தபிழை ஆயிரமும் பொறுத்து
வாரமுற எனையழைத்துத் திரும்பவும்என் கரத்தே
மகிழ்ந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
சீருடைய கண்களும் விட்டகலாதே இன்னும்
தெரிகின்ற தாயினும்என் சிந்தைஉரு கிலதே
ஈரமிலா மரமும்இதற் குருகல்அரி தலவே
இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
உரை: இன்பம் விளைவிக்கும் திருக்கூத்தை யாடித் தில்லையம்பலத்தின்கண் தனித்து விளங்கும் சிவக்கொழுந்தாகிய பெருமானே, அடியவனாகிய யான் உனது திருவருட் பெருமையைத் தெரியேன்; அறியாமையால் நீ செய்த அருளை முன்பு மறுத்துப் பிழை பலபுரிந்தேனாக அவ்வளவையும் பொறுத்து அன்பு பெருக என்னை அருகழைத்து மறுபடியும் அதே திருவருளை மனமகிழ்ந்து செய்த பெருங்கருணைத் திறம் என் மனத்திலும் சிறப்புடைய கண்களிலும் நீங்காமல் நின்று திகழ்கின்றதாகவும், என் சிந்தை நினைந்து உருகுகிறதில்லை; பசுமை குன்றிப் பட்ட மரமும் இது குறித்து உருகுமென்பது நடவாததன்று. எ.று.
மலையைக் கொண்டு கடலைக் கடைந்து தேவர்கள் அரிதிற் பெற்ற அமுதினும் பெறற் கரியவனாதலால், சிவபெருமானை “ஆரமுதே” என்றும் அறிவிலார் யாவரினும் கடையாயவன் எனத் தம்மைக் குறித்தற்கு “அடியேன்” என்றும் கூறுகிறார். அடியவன், கீழே யிருப்பவன் வாரம் - அன்பு. எனக்கு - அவர்பால் அன்பு மிகுமாறு அருகில் அழைத்தார் என்பார், “வாரமுற எனை யழைத்து” எனவும், முன்பு யான் மறுத்த திருவருளையே மீளவும் வலியுறுத்தித் தந்தமை புலப்படத் “திரும்பவும் என் கரத்தே மகிழ்ந்தளித்த” எனவும் இயம்புகின்றார். நன்கு காணும் கண்களைச் “சீருடைய கண்கள்” என்று சிறப்பிக்கின்றார். கண்ணினுமனத்தினும் நின்ற பொருள் நினைந்த வழி நெஞ்சினை யுருக்குமாதலின், “சிந்தை யுருகிலதே” என வருந்துகிறார். ஈரமிலா மரம் - பட்டுலர்ந்த மரம், பசையறக் கெட்ட மரமும் இந்நிலையில் உருகும் என்பது குறிப்பு. (4)
|