3184. அற்புதநின் அருளருமை அறியேன்நான் சிறிதும்
அறியாதே மறுத்தபிழை ஆயிரமும் பொறுத்து
வற்புறுவேன் தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே
வலிந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
கற்புடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
காண்கின்ற தென்னினும்என் கன்மனமோ உருகா
இற்புடைய இரும்பும்இதற் குருகல் அரி தலவே
இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
உரை: இன்பம் விளைவிக்கும் திருநடனத்தைச் செய்து தில்லையம்பலத்தின்கண் தனித்து விளங்கும் சிவக் கொழுந்தே, அற்புதனே, நின்னுடைய அருணலத்தை யான் சிறிதளவும் அறியேன்; அறியாமையால் யான் மறுத்துச் செய்த பிழைகள் பலவற்றையும் பொறுத்தருளி வன்கண்ணனாகிய என்னை யருகழைத்து மறுபடியும் என் கையில் வற்புறுத்தி யருளிய உனது பெரிய கருணைத் திறம் என் மனத்தையும் கற்புள்ள கண்களையும் விட்டு நீங்காமல் இப்பொழுதும் காண நிற்கின்ற தென்றாலும், கல்லொத்த என் மனம் தானும் உருகுகின்றதில்லை; மனையின்கண் இருக்கும் இரும்பும் இதனை யுணரின் நீராய் உருகும். எ.று.
தோற்றக் கேடுகள் காண்டலருமை பற்றி, இறைவனை “அற்புதன்” என்று கூறுகிறார். திருவருளின் அருமை பெருமைகள் பேரறிஞ ரெவராலும் அறிதற் கரியவாகலின், சிறிதும் நான் அறியேன்” என வுரைக்கின்றார். பிழைகள் மிகப்பல வென்றற்குப் “பிழையாயிரம்” என்பது புலமை மரபு. வற்பு, வன்பு - வன்கண்மையென்பது பொருள். கருணை வண்ணம் கருணைத் திறம். காணுதற்றொழிலில் திண்ணிதாய் நின்று இயலுவது பற்றிக் “கற்புடைய கண்கள்” என்று கூறுகின்றார். கண்ணும் மனமும் இப்பொழுதும் நேரில் நிகழ்வது போல நோக்குதல் விளங்கக் “காண்கின்றது” என வுரைக்கின்றார். காண்கின்றது காண நிற்கிறது. கற்போல் உருகாமை பற்றிக் “கன்மனம்” என்கின்றார். இற்புடைய இரும்பு - இல்லின் பக்கத்தேயுள்ள இரும்பு. நெடிது வெந்துருகும் இரும்பினும் வலிது என்பது குறிப்பு. (5)
|