3185.

    ஆண்டவநின் அருளருமை அறியாதே திரிந்தேன்
        அன்றிரவின் மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
    வேண்டிஎனை அருகழைக்துத் திரும்பவும்என் கரத்தே
        மிகஅளித்த அருள்வண்ணம் வினையுடையேன் மனமும்
    காண்தகைய கண்களும்விட் டகலாதே இன்னும்
        காண்கின்ற தாயினும்என் கருத்துருகக் காணேன்
    ஈண்டுருகாக் கரடும்இதற் குருகல்அரி தலவே
        இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.

உரை:

     அம்பலத்தின் இன்பம் விளைவிக்கும் திருக்கூத்தியற்றித் தனிப் பரம்பொருளாய் விளங்கும் சிவக்கொழுந்தே, ஆண்டவனே, நின்னுடைய திருவருளின் அருமையை அறியாமலே புலன் வழித் திரிந்தேனாக, அன்றொருநாள் இரவு நான் நினதருளை மறுத்துரைத்த பிழைகள் அத்தனையும் பொறுத் தருளி என்னை விரும்பி அருகில் அழைத்து மீளவும் அவ்வருளை என் கையில் மிகுதியாகத் தந்து பேணிய கருணைத்திறம், வினை மிக வுடையனாகிய என்னுடைய மனமும் காணும் தகுதியை என் கண்களும் நிலைபெறக் கொண்டவனவாகலின் இப்பொழுதும் கண்ட வண்ணமிருப்பினும் என் மனம் உருகுவதாகத் தெரியவில்லை; இவ்வுலகில் இனிதின் உருகாத கற்பாறையும் உருகுதல் எளிதாம்; என்னே யான் இருந்தவாறு. எ.று.

     மண்ணகத்து வாழ்வளித் தருள்பவனாகலின், சிவபிரானை “ஆண்டவ” எனச் சிறப்பிக்கின்றார். திருவருளின் நலமறியாமைக்கு வருந்துகின்றாராதலின், “அருளுருமையறியேன்” என்றும், அறியாமை காரணமாக முதற்கண் மறுத்த குற்றத்தை, “மறுத்த பிழை” என்றும் அழுங்குகின்றார். அறியாமையாற் செய்தது தெரிவிப்பாராய், புலன் வழிச் சென்று உழன்றதனை, “திரிந்தேன்” எனக் கூறுகின்றார். முதற்கண் போந்த நாள் இரவுப் பொழுதை “அன்றிரவு” எனவும், மக்களுருவில் இரவிற் போந்து செய்த அருளிப் பாட்டை மறுத்த செய்தியைப் பின்பு நினைத்தலின், “மறுத்த பிழையத்தனையும்” எனவும் இயம்புகின்றார். முன்னர் மறுக்கப்பட்ட திருவருளையே பின்னர் வலியுறுத்தித் தந்தமையை வியந்து பேசுதலின், “திரும்பவும் என் கரத்தே மிகவளித்த அருள் வண்ணம்” என்று உரைக்கின்றார். மறுத்தற் கேதுவாயிருந்த அறியாமை முன்னை வினையின் விளைவாதலைத் தெளிந்தமை தோன்ற “வினை யுடையேன்” என விளம்புகின்றார். காணும் நலம் படைத்த கண்களைக் “காண்டகைய கண்கள்” என்று கூறுகிறார். அன்று போல இன்றும் காட்சி தருதலின், “இன்னும் காண்கின்றது” என்றும், கண் காண்டல் போல மனம் நினைக்கின்றதேயன்றி உருகுகின்ற தில்லை என வருந்துவாராய், “ஆயினும் என் கருத்துருகக் காணேன்” என்றும் கலுழ்கின்றார். கரடு - கற்பாறை; இதனைப் பொற்றையெனவும் புகல்வர், அரிதல என்பது எளிதென்னும் பொருளது. கல் எளிதில் உருகுவதாக மனம் உருகா திருப்பது வியப்பாகவுளது என்பதாம்.

     (6)