3186.

    அரசேநின் திருவருளின் அருமைஒன்றும் அறியேன்
        அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
    விரவும்அன்பில் எனைஅழைத்து வலியவும்என் கரத்தே
        வியத்தளிந்த பெருங்கருணை விளக்கம்என்றன் மனமும்
    உரவுமலர்க் கண்களும்விட் டகலாதே இன்னும்
        ஒளிர்கின்ற தாயினும்என் உள்ளம்உரு கிலதே
    இரவுநிறத் தவரும்இதற் குருகல்அரி தலவே
        இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுத்தே.

உரை:

     இன்பம் விளைவிக்கும் திருக்கூத்தை அம்பலத்தின்கண் ஆடி ஒப்பின்றி யுயர்ந்த சிவக் கொழுந்தே, அருளரசே, நின் திருவருளின் அருமை ஒரு சிறிதும் அறியகில்லேன்; அறியாமல் மறுத்து விலக்கிய என் பிழைகளெல்லாவற்றையும் பொறுத்தருளி, மனம் கலந்த அன்புடன் என்னைத் திருமுன்பழைத்து வலிதாக என் கையில் வியந்தளித்த நின் கருணைச் சிறப்பு, என் மனத்தினும், விரிந்த மலரொத்த கண்களிலும் நீங்காமல் இப்பொழுதும் விளங்குகின்றதாக, என்னுடைய உள்ளம் அது நினைந்து உருகுகின்றதில்லை; இருள் நிற அரக்கரும் இது குறித்து இரங்குவது அரிதன் றென்றால் வேறே கூறுவது என்னோ? எ.று.

     ஒன்றும், சிறிதும் என்னும் பொருளது பிழைகள் பல என்றற்குப் “பிழை அத்தனையும்” என்கின்றார். உள்ளத் தெழும் அன்பும் எல்லாவுயிர்பாலும் சென்று பரவித் தோயும் இயல்பிற்றாகலின், “விரவும் அன்பு” என விளக்குகின்றார். வேண்டா வழியும் வற்புறுத்தியது புலப்பட “வலியவும் என் கரத்தே அளித்த” எனவும், உயர் மொழி புகன்று நல்குதல் விளங்க, “வியந்து” எனவும் விளம்புகின்றார். கருணைச் செயலின் சிறப்புத் தோன்ற “விளக்கம்” எனக் கூறுகிறார். உரவு மலர், இதழ் விரிந்த மலர். விரிந்த கடலை “உரவு நீர்” (குறுந். 397) என்பது போல. விரிந்த மலர் உரவு மலர் எனப்படுகிறது. இரவு நிறம், இருள் நிறம். இராவணன் என அரக்கர் பெயர் பெறுதல் காண்க. அரக்கர், கரிய மேனியும் இரக்க மில்லாத மனமுடையவர் என்பராதலின், “இரவு நிறத்தவர்” எனக் கூறுகின்றார்.

     (7)