3187.

    ஐயாநின் அருட்பெருமை அருமைஒன்றும் அறியேன்
        அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
    மெய்யாஅன் றெனை அழைத்து வலியவுமென் கரத்தே
        வியந்தளித்த பெருங்கருணை விளக்கம்என்றன் மனமும்
    கையாது கண்களும்விட் டகலாதே இன்னும்
        காண்கின்ற தாயினும்என் கருத்துருகக் காணேன்
    எய்யாவன் பரலும்இதற் குருகல்அரி தலவே
        இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.

உரை:

     இன்பம் விளைவிக்கும் திருக்கூத்தாடும் தில்லையம்பலத்தின் கண் தனி நின்றோங்கும் சிவக் கொழுந்தாகிய ஐயனே, நினது திருவருளின் பெருமையையும் அருமையையும் யான் சிறிதும் அறியேன்; அறியாமையல் திருவருளை மறுத்த பிழைகள் யாவையும் பொறுத்தருளி அன்று மெய் பெறத் தோன்றி என்னைத் தம் பக்கல் அழைத்து ஏற்குமாறு வற்புறுத்திப் பேசித் தந்த நின் கருணைத் திறம், என்னுடைய மனத்தினும் கண்களினும் வெறுப்புற்று நீங்கி மறையாமல் இன்னமும் காண நிற்கிறதாகவும், என் மனம் அதனை நினைந்து உருகுகிற தில்லை; தளராத வலிய பரற் கல்லும் இதன் பொருட்டு உருகுதல் அரிதன்று; யான் என்செய்வேன். எ.று.

     கொடைப் பொருளைத் தீது கண்டு மறுத்தலைச் செய்யாமல், ஒன்றும் நோக்காமல் மறுத்தது குற்றமாகலின், “அறியாதே மறுத்த பிழை” எனவும், அவை தாமும் பலவாதலின், “அத்தனையும்” எனவும் கூறுகின்றார். மெய்யுருவில் தோன்றினமை பற்றி, “மெய்யா” என்கிறார். தானே யுவந்து வலியப் போந்து கையைப் பற்றிக் கொடுத்தமையால், “வலியவும் என் கரத்தே இனிதளித்த கருணை விளக்கம்” எனப் பாராட்டுகின்றார். இச்செயல் வகையால் கருணைத் திறம் விளங்கித் தோன்றுவது கொண்டு “விளக்கம்” என்று உரைக்கின்றார். கைத்தல், ஈண்டு வெறுத்தல் மேற்று. காட்சி கண்கட்கே யன்றி மனத்துக்கும் உரியதாகலின், “காண்கின்றது” எனக் குறிக்கின்றார். கருத்து, மனம். சிறிதும் உருகாமை பற்றி, “உருகக் காணேன்” என்று சொல்லுகின்றார். எய்த்தல் - தளர்தல். எத்துணைக் காலம் வெயிலிலும் பனியிலும் கிடப்பினும் பரற்கல் உருகுவ தின்மையால் “எய்யா வன்பரல்” என இயம்புகின்றார்.

     (8)