3188. அப்பாநின் திருவருட்பேர் அமுதருமை அறியேன்
அன்றிரவின் மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
இப்பாரில் எனைஅழைத்து வலியவும்என் கரத்தே
இனிதளித்த பெருங்கருணை இன்பமென்றன் மனமும்
துப்பாய கண்களும்விட் டகலாதே இன்னும்
தோன்றுகின்ற தாயினும்இத் துட்டநெஞ்சம் உருகா
எப்பாவி நெஞ்சுமிதற் குருகல்அரி தலவே
இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
உரை: உயிர்களுக்கு இன்பம் விளைவிக்கும் திருக்கூத்தை அம்பலத்தின்கண் ஏற்றித் தனித்து நின்று ஓங்குகின்ற ஒப்பற்ற சிவக் கொழுந்தாகிய அப்பனே, உனது திருவருளாகிய பெரிய அமுதத்தின் அருமை பெருமைகளை அறியேனாதலால், அன்றொருநாள் இரவு எழுந்தருளிய போது மறுத்து ஒதுக்கிய என் பிழைகள் அத்தனையும் திருவுள்ளத்தில் கொள்ளாது பொறுத்தருளி இவ்விடத்தில் என்னை யழைத்து நலம் அறிவுறுத்தி என் கையில் விருப்புடன் அளித்தருளிய பெருங் கருணையால் பிறந்த இன்பம், என் மனத்திலும் நுகர் கருவிகளான கண்களிலும் விட்டு நீங்காமல் இப்பொழுதும் தோன்றுகின்றதாகவும் துட்டத் தன்மையையுடைய என்னுடைய இந்த மனம் உருகுகிறதில்லை; என்னின் வேறாய் உள்ள எந்தப் பாவி நெஞ்சமும் இதற்கு எளிதில் உருகும் இயல்பினதாம். எ.று.
அமுதம் போல் அழியா நலம் செய்யும் தன்மையுடையதாகலின் “திருவருட் பேரமுது” என்று சொல்லுகின்றார். அருமை, பிறர்க் கருந்தன்மை. முன்பு ஒருநாள் இரவு போந்து அருள் செய்த குறிப்பு அருள் பிரகாச மாலையில் கூறுகின்றாராதலால், அதனை “அன்றிரவு” என்று சுட்டுகின்றார். பார் - ஈண்டு இடமென்னும் பொருள் குறித்து நின்றது. இன்முகமும் இன் சொல்லும் கொண்டு வழங்கினமைத் தோன்ற, “இனிதளித்த பெருங்கருணை” என இயம்புகிறார். கொடைப் பொருளின் விளைவு இன்பமாதல் பற்றி, “கருணை இன்பம்” என்று கூறுகின்றார். துப்பு - நுகர்தல். காட்சி இன்பம் நுகர்தற்குரிய கருவியாதலால் “துப்பாய கண்கள்” என்று சொல்லுகின்றார். நற்பண்பு இல்லாமை தோன்ற, “துட்ட நெஞ்சம்” என்று வைகின்றார். பாவத்தைச் செய்கின்ற நெஞ்சினைப் பாவி நெஞ்சம் என்கிறார். பாவத்தை யுடையது பாவி.எத்தகைய பாவிகளின் நெஞ்சமும் நின் திருவருட்கு எளிதில் உருகும் என வற்புறுத்தற்கு “எப்பாவி நெஞ்சமும்” என்கின்றார். உம்மை தொக்கது. (9)
|