3189. அம்மான்நின் அருட்சத்தி அருமைஒன்றும் அறியேன்
அன்றிரவின் மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
வெம்மாயை அகற்றிஎனை அருகழைத்தென் கரத்தே
மிகஅளித்த பெருங்கருணை விளக்கம்என்றன் மனமும்
மைம்மாழை விழிகளும்விட் டகலாதே இன்னும்
வதிகின்ற தாயினும்என் வஞ்சநெஞ்சம் உருகா
எம்மாய நெஞ்சும் இதற் குருகல்அரி தலவே
இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
உரை: உலகுயிர்கட்கு நலம் புரியும் திருக்கூத்தை அம்பலத்தின் கண் ஆடித் தனித்து நின்ற ஓங்குகின்ற சிவக் கொழுந்தாகிய பெருமானே, நின்னுடைய அருட் சக்தியின் அருமை சிறிதும் அறியேனாவேன்; ஆதலால், அன்றொருநாள் இரவில் என்பால் எழுந்தருளிய போது உனது அருளை ஏற்க மறுத்ததனால் உண்டாகிய பிழைகள் அத்தனையும் பொறுத்தருளி, என்னிற் படிந்திருந்த வெவ்விய மயக்கத்தைப் போக்கி என்னை அருகில் அழைத்து என் கையில் விருப்பத்துடன் அளித்த அன்பு செய்த உன்னுடைய பெரிய கருணையின் சிறப்பு என் மனத்தின் கண்ணும் மை தீட்டப் பெற்று நிறம் கரியவாகியமாவடு போன்ற கண்களிடத்தும் நீங்காமல் இப்பொழுதும் நிலவுகின்றதாகவும், வஞ்சம்பொருந்திய எனது நெஞ்சம் உருகுகிறதில்லை; எத்தகைய மாய நெஞ்சமும் இது குறித்து இரங்காது ஒழியாது. எ.று.
மான், பெரியவன். சிவசத்தி அருள் எனவும், அருட் சத்தி எனவும் வழங்குவது பற்றி “அருட் சத்தி” என்கின்றார். திருவருள் யாவராலும் எளிதில் பெறற்பால தன்மையின், “அருமையொன்றும் அறியேன்” என அறிவிக்கின்றார். மண்ணில் பிறந்தார்க்கு விலக்கரும் ஊறாய் நிற்றலின் “வெம்மாயை” என்று விளம்புகின்றார். மிக்க அன்புடன் அருள் புரிந்த திறத்தை “மிக அளித்த” என அளித்த” என மொழிகின்றார். இது பெருந்திணை நங்கை ஒருத்தியின் கூற்றாதல் விளங்க “மைம்மாழை விழிகள்” என்று குறிக்கின்றார். வதிதல், தங்குதல். எல்லா நெஞ்சங்களும் என்பார், “எம்மாய நெஞ்சமும்” என்கிறார், மாயம் தோயாத நெஞ்சம் உலகில் இல்லை என்பதற்கு. (10)
|