6. சௌந்தர மாலை
அஃதாவது, தில்லையம்பலத்தில் காட்சி தந்து அருளும் சிவபெருமானுடைய திருவடி அழகு, அனுபவத்தைப் பொருளாகக் கொண்டு பாடித் தொடுத்த சொல்மாலை என்பதாம். இதன்கண், சிவத்தின் பேரழகை அனுபவித்த சிவத்தொண்டர், சிவயோகியர், பக்தர்கள், புண்ணியர், மெய்யன்பர், பழவடியார், மெய்ஞானிகள், ஏமசித்தர் ஆகியோர் பெற்ற சிவானுபவங்கள் எடுத்துக் காட்டப்படுகின்றன. அழகு என்னும் சொல் வடமொழியில் சுந்தரம் எனவும், சௌந்தரம் எனவும் வழங்கும் என அறிக.
எண்சீர்க் கழிநெடி யாசிரிய விருத்தம் 3190. சேலோடும் இணைந்தவிழிச் செல்விபெருந் தேவி
சிவகாம வல்லியொடு சிவபோக வடிவாய்
மேலோடு கீழ்நடுவுங் கடந்தோங்கு வெளியில்
விளங்கியநின் திருஉருவை உளங்கொள்ளும்போ தெல்லாம்
பாலோடு பழம்பிழிந்து தேன்கலந்து பாகும்
பசுநெய்யுங் கூட்டிஉண்ட படிஇருப்ப தென்றால்
மாலோடு காண்கின்ற கண்களுக்கங் கிருந்த
வண்ணம்இந்த வண்ணம்என எண்ணவும் ஒண் ணாதே.
உரை: சேல்மீன் போன்ற கண்களையுடைய அருட் செல்வப் பெருந்தேவியாகிய சிவகாமவல்லியை ஒருகூறாகக் கொண்ட சிவபோகத் திருமேனியாகிய மேல், கீழ் நடு என்ற பாகுபாடு இல்லாது ஓங்கும் பரவழியில் விளங்குகின்ற நின்னுடைய திருவுருவை மனக் கண்ணில் காணும்போதெல்லாம் பாலில் பழம் பிழிந்து தேனைக் கலந்து பாகும் பசு நெய்யும் கூட்டி உண்டது போல இன்பம் தருகிறது என்றால், மாயா காரிய உலகியல் நல்கும் மயக்கத்தோடு காண்கின்ற கண்களுக்கு மனக் காட்சியிற் அழகின் இயல் இத்தகையது என எண்ண முடியாததாகும். எ.று.
சேல், மீன் வகையில் ஒன்று. மகளிர் கண்களுக்கு அதனை உவமம் செய்வது மரபாதலால், “சேலோடும் இணைந்த விழி” எனச் சிறப்பிக்கின்றார். திருவருளே பொருளாக உடையவளாதலின், உமாதேவியைச் “செல்வி” என்கிறார். பெருந்தேவி, மனைவி. உமையோடு கூடிய திருவுருவம் சிவத்திற்குப் போக வடிவமானது ஆகையால், “சிவபோக வடிவாய்” எனத் தெரிவிக்கின்றார். சிவஞானப் பர வழிக்கு மேல், கீழ், நடு என்கின்ற பாகுபாடில்லாமையால் அதனை “மேலோடும் கீழ் நடுவும் கடந்தோங்கு வெளி” என்று விளக்குகிறார். சிவனது போகத்திருவுருவை மனத்தில் நினைக்கும் பொழுது எழுந்தருளுகின்ற திருவுருவம் காண்கின்ற சிந்தைக்குப் பேரின்பத்தை வழங்குதலால், அதனை உலகியல் பொருள் கொண்டு விளக்கம் செய்யலுற்ற வடலூர் வள்ளல் “பாலோடும் பழம் பிழிந்து தேன் கலந்து பாகும் பசுநெய்யும் கூட்டி உண்டபடி இருப்பது” எனவுரைக்கின்றார். தெளிந்த சிந்தையுடைய மேலோர்களின் மனக் கண்களுக்கு இத்தகைய காட்சியும் இன்பமும் அமைகிற தென்றால் உலகியல் மயக்கத்தின்கண் கொண்டு காணலுற்றால் காட்சி எல்லையைக் கடந்து போதலால் அவர்கட்கு அதனை உணரந்து கொள்ள இயலாது என்பாராய், “இருந்த வண்ணம் இந்த வண்ணம் என எண்ணவும் ஒண்ணாது” என்று கூறுகின்றார். எண்ணவும் என்பதனால் சொல்ல முடியாது என்பது தானே பெறப்படும். உலகம் மாயா காரியமாதலின் அதன்கண் வாழும் மக்களுயிர்க்கு மயக்கம் இயல்பாதலின், எதனையும் உலகப் பொருளோடு வைத்து நோக்குவது வாய்ப்பாதல் பற்றி, “மாலோடு காண்கின்ற கண்களுக்கு” என விதந்துரைக்கின்றார். “ஆணும் பெண்ணுமாய் அடியார்க்கு அருள் நல்கிச் சேணின்றவர்க் கெல்லாம் சிந்தை செயவல்லான்” என ஞானசம்பந்தர் கூறுவதும் இக் கருத்தே பற்றியதாகும்.
இதனால், சிவபெருமானுடைய சிவபோக உருவ நலம் உலகியல் கண் கொண்டு காண்பார்க்கு நினைக்க முடியாததன்று என்று தெரிவித்தவாறாம். (1)
|