3191. இன்பருளும் பெருந்தாய்என் இதயத்தே இருந்தாள்
இறைவியொடும் அம்பலத்தே இலங்கியநின் வடிவை
வன்புறுகன் மனக்கொடியேன் நினைக்கும்இடத் தெல்லாம்
மனங்கரைந்து சுகமயமாய் வயங்கும்எனில் அந்தோ
அன்புடையார் நின்றுநின்று கண்டுகொண்ட காலம்
ஆங்கவர்கட் கிருந்தவண்ணம் ஈங்கெவர்கள் புகல்வார்
துன்புறுதல் இல்லாத சுத்தநிலை உடையார்
தொழுகின்ற தோறுமகிழ்ந் தெழுகின்ற துரையே.
உரை: துன்பத் தொடர்பற்ற, சுத்த நிலை பெற்ற பெரியோர்கள் தொழுது பரவுந்தோறும் உவகை மிகும் பெருமானே, இன்பமளிக்கும் பெருமை சான்ற தாயாகியவளும் என் மனத்தின் கண் எழுந்தருளுபவளுமாகிய இவ்விறைவியோடு அம்பலத்தின்கண் காட்சி தரும் நின்னுடைய அருள் வடிவத்தை வன்மை மிக்க கற்போன்ற மனத்தையுடைய கொடியவனாகிய யான் நினைக்கும் போதெல்லாம் என் மனம் நீராய்க் கரைந்து இன்ப மயமாகி விளங்குகிற தென்றால், மெய்யன்புடைய திருத்தொண்டர்கள் நின் திருமுன் பன்முறையும் நின்று தம் கண்களாரக் கண்டு அருள் பெற்ற காலத்தில் அவர்கட்கு அருள் புரிய நீ வீற்றிருந்த திறத்தை இங்கே இப்போது எவர் தாம் எடுத்துரைக்க வல்லார். எ.று.
சுத்த மாயை, சுத்த தத்துவ மென்றாற் போலத் துன்பச் சூழலேயில்லாத தூய இன்ப நிலையைத் “துன்புறுதல் இல்லாத சுத்தநிலை” என்றும், கேவல சகலங்களின் நீங்கிய சிவானுபூதிச் செல்வர்களைச் “சுத்தநிலை யுடையார்” என்றும் இயம்புகின்றார். அப்பெருமக்கள் தொழுது வணங்கிப் போற்றுவது சிவபெருமானுக்கும் பெருமகிழ்ச்சியாய் இருத்தலின், தொழுகின்ற தோறும் மகிழ்ந்தெழுகின்ற துரை” எனத் துதிக்கின்றார். உயிர்கள் விழையும் இன்ப நுகர்வுகளைத் தாயாய்த் தலையளிக்கும் பெருமகளாதலின், திருவருட் சத்தியாகிய உமாதேவியை, “இன்பருளும் பெருந்தாய்” எனவும், அத்தாய் என் மனத்தின்கண் எழுந்தருளித் திருவருளின்பத்தை யான் நுகரத் தருகின்றாள் என்பாராய் “என் இதயத்தே யிருந்தாள்” எனவும் இயம்புகின்றார். இருக்கின்றவளை இருந்தாளென இறந்த காலத்தாற் கூறியது துணிவு பற்றியென அறிக. திருச்சிற்றம்பலத்தின்கண் உமையம்மை காணத் தனி நின்று ஆடுகின்ற சிவவுருவத்தை, “இறைவியொடும் அம்பலத்தே இலங்குகின்ற வடிவு” எனச் சிறப்பித்துரைக்கின்றார். வன்புறு கல், வன்மை மிக்கக் கருங்கல். கன்மனமுடைமையால் தம்மை, “கன்மனக் கொடியேன்” எனக் கூறுகின்றார். ஞானமேயாய சிவவடிவத்தை நினைக்கும்போது நெஞ்சம் கல்லாம் தன்மை கெட்டு நெக்குருகி ஆங்குச் சுரக்கும் சிவானந்தத்தில் திளைத்து இன்பமயமாதல் தோன்ற, “நினைக்குமிடத்தெல்லாம் மனம் கரைந்து சுகமாய் வயங்கும்” எனவுரைக்கின்றார். அன்புடையார் என்றது திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்ற நால்வரும் அவர்கட்கு முன்னும் பின்னும் நிலவிய பெருமக்களை எனவுணர்க. கண்டு கொண்ட காலம், சிவத்தைக் கண்களாரக் கண்டு சிவபோகம் பெற்ற காலமாகும். அவர்களின் திருக்கண்கட்குக் காட்சி தந்து இன்பறுத்திய திருவுருவ நலம் இத்தகைய தென இப் போது இவ்விடத்து எவராலும் உரைத்தலரிது என்பாராய், “ஆங்கவர்கட்கு இருந்தவண்ணம் ஈங்கு எவர்கள் புகல்வார்” என விளம்புகின்றார்.
இதனால், அன்று அடியார்கள் கண்டு இன்புற்ற சிவக் கோலம் இன்று எவராலும் காணும் தரமுடைய தன்றெனத் தெரிவித்தவாறாம். (2)
|