3192. சிவயோக சந்திதரும் தேவிஉல குடையாள்
சிவகாம வல்லியொடுஞ் செம்பொன்மணிப் பொதுவில்
நவயோக உருமுடிக்கண் விளங்கியநின் வடிவை
நாய்க்கடையேன் நான்நினைத்த நாள்எனக்கே மனமும்
பவயோக இந்தியமும் இன்பமய மான
படிஎன்றால் மெய்யறிவிற் பழுத்தபெருங் குணத்துத்
தவயோகர் கண்டவிடத் தவர்க்கிருந்த வண்ணம்
தன்னைஇந்த வண்ணம்என என்னை உரைப்பதுவே.
உரை: சிவயோகங்களை முயல்பவர்க்கு அவ்யோகப் பயனைக் கட்டுவிக்கும் தேவியும், உலகுகளை யுடைமையாக வுடையவளுமாகிய சிவகாம வல்லி யென்னும் உமாதேவியுடன் செம்பொன்னால் வேயப்பட்ட மணியொளிரும் அம்பலத்தின்கண் யோக வகையில் எயுதும் காட்சி முடிவில் விளங்குவதாகிய நின்னுடைய திருவுருவை நாயினும் கீழ்ப்பட்டயான் நினைக்கிற போது எனக்கே மனமும் கண் முதலிய இந்திரியங்களும் இன்பமாகின்றன என்றால், உண்மை ஞானமும் பெரிய நற்குணமும் கொண்ட தவயோகியர் காட்சிக்குத் தோன்றிய ஞானத் திருவுரு நலத்தை வாயால் உரைப்பது எவ்வாறாகும். எ.று.
யோக முயற்சியையும் அதன் விளைவாகிய போகத்தையும் கூட்டுவிக்கும் திருவருட் சத்தியாகலின், “சிவயோக சந்தி தரும் தேவி” என்று கூறுகின்றார். போக நுகர்வு சந்தி எனப்படுகிறது. கூடுதலும் கூட்டுவித்தலும் சந்தியாகும். உலகனைத்தையும் பெற்றுடையவளாதல் பற்றி “உலகுடையாள்” என இயம்புகிறார். “கருதரிய கடலாடை யுலகு பல அண்டம் கருப்பமாய்ப் பெற்ற கன்னி” (தனிப்) எனத் துறைமங்கலம் சிவப்பிரகாசர் கூறுவது காண்க. சிவகாமவல்லி - தில்லைப் பதியில் உமாதேவிக்குப் பெயர். தில்லையம்பலம் பொற் சபையாதலால், “செம்பென்மணிப் பொது” என்று செப்புகின்றார். தவ வுருவினின்று செய்யும் யோகத்தின் முடிவில் காட்சிப்படும் சிவசொரூபம், “தவயோக உருமுடிக்கண் விளங்கிய வடி” வெனப் பேசுகின்றார். “பொறிப் புலன்களின் போக்கறுத் துள்ளத்தை நெறிப்படுத்தி நினைப்பவர் நெஞ்சுளே, அறிப்புறும் அமுதாயவன்” (ஏகம்) என நாவுக்கரசர் நவில்வது காண்க. தவயோகங்கள் விரதங்களால் உருப்படுதலின் “உரு முடிவில்” எனக் குறித்துரைக்கின்றார். தவயோகியரின் பெருமையை நினைக்கத் தமது சிறுமை புலப்படக் காண்டலின், “நாய்க் கடையேன்” என இழிக்கின்றார் நாயினும் கடையாயவன் என்றற்கு “நாய்க் கடையேன” எனச் சொல்லுகிறார். பிறவிப் பிணிக்கு ஏதுவும் வாயிலுமாதலின்’ கண் முதலிய பொறிவாயில்களைப் “பவயோக இந்தியம்” என்கிறார். இந்திரியம், இந்தியமென வந்தது. “இந்தியப் போகில்” (ஞானா. 23) எனப் பெரியோர் வழங்குவர். படி-தன்மை. சிவஞான யோகிகட்கு உண்மை யுணர்வும் உயர் குணங்களும் இன்றியமையாவாகலின், “மெய்யறிவில் பழுத்த பெருங்குணத்துத் தவயோகர்” என்று உரைக்கின்றார்.
இதனால், சிவயோகியருடைய சிவானுபவம் தெரிவித்தவாறாம். (3)
|