3193. சித்தியெலாம் அளித்தசிவ சத்திஎனையுடையாள்
சிவகாம வல்லியொடு சிவஞானப் பொதுவில்
முத்தியெலாந் தரவிளங்கும் முன்னவநின் வடிவை
மூடமனச் சிறியேன்நான் நாடவரும் பொழுது
புத்தியெலாம் ஒன்றாகிப் புத்தமுதம் உண்டாற்
போலும்இருப் பதுஅதற்கு மேலும்இருப் பதுவேல்
பத்திஎலாம் உடையவர்கள் காணுமிடத் திருக்கும்
படிதான்எப் படியோஇப் படிஎன்ப தரிதே.
உரை: எண் வகைச் சித்திகளையும் வல்லவர்களுக்கு அளித்தருளிய சிவசக்தியும், என்னை அடிமையாக வுடையவளுமாகிய சிவகாம வல்லி என்னும் பெயர் கொண்ட உமாதேவியோடு சிவஞானம் திகழ்கின்ற தில்லையம்பலத்தின்கண் முத்தி வகைகளை ஆன்மாக்களுக்குத் தருதல் பொருட்டுத், திருக்கூத்தாடி விளங்கும் முன்னவனே, நினது திருவுருவை, அறியாமை படிந்த மனத்தையுடைய சிறியவனாகிய நான் நினைக்க முற்படும் போது என்னுடைய மனம் புத்தி முதலிய காரணங்கள் எல்லாம் ஒன்றாய் புதியதொரு அமுதம் உண்டது போல் இருப்பதும் அதற்கு மேலும் களிப்பு மிக்கிருப்பதும் ஆகுமெனில் பத்திச் செல்வமெல்லாம் உடைய பெருமக்கள் காணுமிடத்து இருக்கும் நிலைமைதான் எப்படி உளதாகுமோ? இப்படித்தான் என்று வரையறுத்துச் சொல்வது ஆகாததாம். எ.று
அணிமா, மகிமா முதலிய சித்திகள் எட்டினையும் படைத்தளித்தது சிவசக்தி யாதலால், “சித்தியெலாம் அளித்த சிவசக்தி” என்று உரைக்கின்றார். உயிர்களுக்கு வேண்டுகின்ற உலகு, உடல், கருவி முதலியவற்றை அளித்து அடிமை கொண்டவளாதலால், உமாதேவியை
“எனையுடையால்” என்று புகழ்கின்றார். தில்லையம்பலம் ஞானகாச மெனப்படுவ துண்மையின், “சிவஞானப் பொது” என்று புகல்கின்றார். பரம், அபரம் எனவும், பரம் பதம் எனவும் முத்தி வகைகள் பல வுண்மை பற்றி “முத்தி யெலாம்“ என மொழிகின்றார். மூட மனம் -- அறியாமை நிறைந்த மனம். நாட வரும் பொழுது - எண்ணும் போது, புத்தமுதம் - புதுமையான அமுதம். அமுதம் உண்ட வழிப் பிறக்கும் இன்பத்திலும் மிக மேலான இன்பம் உளதாகலின், அமுதம் உண்டாற் போலும் இருப்ப தென்பவர் அதற்கு மேலும் இருப்ப தென இசைகின்றார். பத்தி உடையவருக்கு இருக்கின்ற நலம் அத்தனையும் ஒருங்கே பெற்று விளங்கிய மாணிக்கவாசகர் போன்ற பெருமக்களை மனதிற் கொண்டு “பத்தியெலாம் உடையவர்கள்” என்று கூறுகின்றார். பத்திச் செல்வர்கள் கண்டு பெறும் இன்பத்தை மாணிக்கவாசகர், “வற்றுதலும் உற்றுதலும் இல்லாத ஆனந்த வெள்ளம்” என்பது ஈண்டு நினைவு கூறத்தக்கது. புத்தி யெலாம் ஒன்றாதலாவது, கரணங்கள் நான்கும் சிந்தையேயாதல்.
இதனால், பத்திமான்கள் பெறும் இன்ப வனுபவம் தெரிவித்தவாறாம். (4)
|