3194.

    தெய்வமெலாம் வணங்குகின்ற தேவிஎனை அளித்தாள்
        சிவகாம வல்லியொடு திருமலிஅம் பலத்தே
    சைவமெலாந் தரவிளங்கு நின்வடிவைக் கொடியேன்
        தான்நினைத்த போதெனையே நான்நினைத்த திலையேல்
    ஐவகைஇந் தியங்கடந்தார் கண்டவிடத் திருந்த
        அனுபவத்தின் வண்ணமதை யார்புகல வல்லார்
    உய்வகை அந்நாள்உரைத்த தன்றியும்இந் நாளில்
        உந்திரவில் வந்துணர்வு தந்தசிவ குருவே.

உரை:

     யான் உய்யும் பொருட்டு முன்பொருநாள் வாயால் அறிவுறுத்தியதேயன்றி இந்நாள் முற்படத் தோன்றிய இரவில் என் முன் போந்து, மெய்யுணர்வு தந்த சிவ குருபரனே, தெய்வங்க ளெல்லாம் வாழ்த்தி வணங்குகின்ற தேவியும் என்னை உலகில் பிறப்பித்தவளுமாகிய சிவகாமவல்லி யென்ற உமாதேவியோடு செல்வ வளம் மிக்க தில்லையம்பலத்தின்கண் சைவ சமய வகைகள் தழைக்க விளங்குகின்ற நின் திருவுருவைக் கொடுமை யுடையவனாகிய என்னுடைய மனத்தில் நினைந்து நோக்கிய பொழுது என்னையே மறந்து ஒழிந்தேனாதலால் பொறி ஐந்தையு மறுத்த பெரியோர் கண்டவிடத்து உண்டாகிய இன்பானுபூதியின் இயல்பை யாவர் எடுத்துச் சொல்ல வல்லவராவர். எ.று.

     முன்பொருநாள் மக்களினத்துச் சான்றோர் ஒருவர் திருமேனி கொண்டு வந்து சைவ உண்மைகளை உரைத்ததோடு பின்பொருநாள் இரவுப் போதில் எழுந்தருளிச் சிவஞானத்தைச் சிவபெருமான் உரைத்தருளிய வரலாறு நினைப்பிக்கின்றாராதலால், உய்வகை அந்நாள் உரைத்ததன்றியும், இந்நாளில் உந்திரவில் வந்து உணர்வு தந்த சிவகுருவே” என்று தெரிவிக்கின்றார். உய்வகை என்பதனால் முன்னாள் உரைத்தது சைவ நீதி பற்றிய தென்றும், இந்நாளில் உணர்வு தந்த என்பதனால் இந்நாள் உரைத்தது சைவ ஞானம் என்றும் பெறப்படுகின்றது. பகற்கு முந்துதலால், இரவு “உந்திரவு” எனப்படுகிறது. வேத முதலாக வந்த இதிகாச புராணங்கள் எண்ணிறந்த தெய்வங்களை எடுத்தோதுவதால், “தெய்வமெலாம்” எனக் கூறுகின்றார். அறிவு செயலாற்றலைத் தந்தமை பற்றி, உமாதேவியை “எனை அளித்தாள்” என்கிறார். அருட் செல்வமும் பொருட் செல்வமும் மிக்குள்ளமையால் “திருமலி யம்பலம்” என்று சிறப்பிக்கின்றார். பாசுபதம், மாவிரதம், காபாலம் முதலாகவும், பாடாணவாத சைவம், சிவ சமவாத சைவம் முதலாக வுள்ள சமயம், அகம் புறம் என இரண்டாய்ப் பிரிந்து பன்னிரண்டாய் விரிதலின் “சைவ மெலாம்” எனக் குறிக்கின்றார். மெய், வாய் முதலிய பொறிகளைந்தினையும்” ஐவகை இந்தியம்” எனக் குறிக்கின்றார். கடத்தல் எனபது ஈண்டு ஐம்பொறிகளையும் வென்று உயர்தல்.

     இதனால், பொறி வாயில் ஐந்தவித்த புண்ணியர்களின் சிவானுபூதியைத் தெரிவித்தவாறாம்.

     (5)