3195. தேன்மொழிப்பெண் ணரசிஅருட் செல்வம்எனக் களித்தாள்
சிவகாம வல்லியொடு செம்பொன்மணிப் பொதுவில்
வான்மொழிய நின்றிலங்கு நின்வடிவைச் சிறியேன்
மனங்கொண்ட காலத்தே வாய்த்தஅனு பவத்தை
நான்மொழிய முடியாதேல் அன்பர்கண்ட காலம்
நண்ணியமெய் வண்ணமதை எண்ணிஎவர் புகல்வார்
நூன்மொழிக்கும் பொருட்கும்மிக நுண்ணியதாய் ஞான
நோக்குடையார் நோக்கினிலே நோக்கியமெய்ப் பொருளே
உரை: நூல்களில் வழங்கும் சொல்லுக்கும் பொருளுக்கும் அகப்படாத நுண்ணிதாய் ஞான நாட்ட முடைய பெருமக்களின் நோக்கின்கண் காணப்படுவதாய் உள்ள மெய்ப்பொருளாகிய சிவபரம்பொருளே, தேன் இனிமையுடைய சொற்களைப் பேசும் பெண்ணினத்திற்குத் தனியரசியாகியவளும் திருவருளாகிய செல்வத்தை எனக்கு அளித்தவளுமாகிய சிவகாமவல்லி யோடு செம்பொன் வேய்ந்த அழகிய அம்பலத்தின்கண் வானோர் புகழ நின்று விளங்குகின்ற நின்னுடைய திருவடிவை அறிவால் சிறியவனாகியயான் மனத்தின்கண் எண்ணிய காலத்து எனக்குளதாகிய அனுபவத்தை நான் எடுத்தோத முடியாததாயினும் மெய்யன்பர்கள் கண்ட காலத்தில் எய்திய உண்மை அனுபூதியை நினைந்து எவர்தான் எடுத்துரைப்பார். எ.று.
உலக வழக்கினும் நூல் வழக்கில் நிலவும் சொற்களும் பொருட்களும் நுண்ணியவாதலின், நன்மொழிக்கும் பொருட்கும் மிக நுண்ணியதாய் எனவும், ஞான நாட்டமுடைய பெரியோர்களின் ஞானக் கண்ணுக்குப் புலனாகி இன்பமளித்த பரசிவமாதலின், “ஞான நோக்குடையார் நோக்கினிலே நோக்கிய மெய்ப் பொருளே” எனவும் இயம்புகின்றார். செவிக்கு இன்பம் நல்கும் மொழியைத் தேன்மொழி என்னும் வழக்குப் பற்றிச் சொல்லே எடுத்துரைக்கும் மங்கையர் அரசியாகிய உமாதேவியைத் “தேன் மொழிப் பெண்ணரசி” என்றும், தன் திருவருளாகிய செல்வத்தைத் தன்னை வணங்கிப் பரவுவார்க்குப் பெருக நல்கும் பெருமாட்டி யென்றற்கு “அருட் செல்வம் எனக்களித்தாள்” என்றும் உரைக்கின்றார். செம்பொன் வேய்ந்து பல்வகை மணிகளால் அழகு செய்யப்பெற்ற அம்பலமாதலின் “செம்பொன்மணிப் பொது” என்று சிறப்பிக்கின்றார். வான் - வானுலகத்துத் தேவர்கள். தில்லையம்பலத்தில் நின்றாடும் சிவத்தின் திருவுருவை மண்ணுலக மக்களோடு வானுலகத் தேவர்களும் உடனிருந்து வழிபடுவது விளங்க, “வான்மொழிய நின்றிலங்கு நின் வடிவை” எனவும், அறிவால் சிறியவனாகிய நான், என் சிறுமைக் கொத்த அளவில் மனக் கண்ணில் கண்டு பெற்ற சிவானுபவம் என் சொல்லளவிற் றன்று என்பாராய், “சிறியேன் மனங்கொண்ட காலத்தே வாய்த்த அனுபவத்தை நான் மொழிய முடியாது” எனவும், முன்னோராகிய மெய்யன்புடைய தொண்டர்கள் கண்டு அனுபவித்தது மெய்ம்மை எனினும் அதனை இப்பொழுது நினைந்து சொல்லும் திறமுடையார் உலகில் எவருமில்லை என்பாராய், “அன்பர் கண்ட காலம் நண்ணிய மெய்வண்ணமதை எண்ணி எவர் புகல்வார்” எனவும் எடுத்துரைக்கின்றார்.
இதனால், மெய்யன்பர்கள் கண்ட சிவானுபவம் எடுத்தோதியவாறாம். (6)
|