3196.

    சிற்றிடைஎம் பெருமாட்டி தேவர்தொழும் பதத்தாள்
        சிவகாம வல்லியொடு சிறந்தமணிப் பொதுவில்
    உற்றிடைநின் றிலங்குகின்ற நின்வடிவைக் கொடியேன்
        உன்னுதொறும் உளம்இளகித் தளதளஎன் றுருகி
    மற்றிடையில் வலியாமல் ஆடுகின்ற தென்றால்
        வழியடியர் விழிகளினால் மகிழ்ந்துகண்ட காலம்
    பற்றிடையா தாங்கவர்கட் கிருந்தவண்ணந் தனையார்
        பகர்வாரே பகர்வாரேல் பகவன்நிகர் வாரே.

உரை:

     சிறிதாகிய இடையையுடைய பெருமாட்டியும், தேவர்கள் போற்றித் தொழும் திருவடிகளை யுடையவளுமாகிய சிவகாமவல்லியுடன் சிறந்த மணியிழைத்த பொன்னம்பலத்தின்கண் மேவி நின்று விளங்குகின்ற திருவுருவத்தைக் கொடியவனாகிய யான் நினைக்குந்தோறும் நெஞ்சம் நெகிழ்ந்து தளதள வென்று உருகி, இடையில் உறைதலின்றி அசைகின்றதாக, வழி வழியாக வந்த மெய்யடியவர் தம் கண்களாற்கண்டு பரவிய காலத்தில் அன்பு குறையாமல் அவர்கள் கண்டு இன்புற்ற அழகு நலத்தை யாவர் அறிந்து புகல்வார்கள்; சொல்லுவார் உளராயின் தேவ தேவனையொப்பர். எ.று.

     உயர்நிலை இளமகளிர்க்கு இடை சிறுத்திருப்பது பேரழகு தருதலால், “சிற்றிடை எம்பெருமாட்டி” எனப் போற்றுகின்றார். தேவர் கோ அறியாத தேவதேவனுக்கு மனைவியாய் அவனது பராசத்தியாகலின், “தேவர் தொழும் பதத்தாள்” என்று துதிக்கின்றார். தில்லையம்பலத்தைச் சிறப்பித்து அதன்கண் நின்று வழங்கும் இனிய காட்சியைப் புகல்கின்றாராதலால், “மணிப் பொதுவில் உற்று இடை நின்று இலங்குகின்ற திருவடிவு” எனக் கூறுகின்றார். நேரியமுறையிலன்றித் தேவருலகிலும் மண்ணுலகிலும் இரண்டிலும் நிலவும் நலம் தீங்குகளிலும் தடுமாறும் நினைவுகளை நினைந் தொழுகுதலால், தம்மைக் “கொடியேன்” என்று குறிக்கின்றார். கொடியவனாகிய எனக்கு நினது திருவடிவ இன்ப நினைவால் நெஞ்சம் குழைந்து நீராய் உருகித் தளதள வென்றமைகிறது என்பாராய், “உன்னுதொறும் உளம் இளகித் தளதள வென்றுருகி மற்றிடையில் வலியாமல் ஆடுகின்றது” என உரைக்கின்றார். உன்னுதல் - நினைத்தல். இவ்வுலகத்து இளகியுருகும் நெய் முதலியன பின்னர் உறைந்து இறுகுவது போலின்றி உருகிய வண்ணமே நிலைபெறுகிற தென்றற்கு “இடையில் வலியாமல் ஆடுகின்றது” எனக் கூறுகின்றார். வழியடியார் - வழி வழியாக ஆட்பட்டொழுகும் தொண்டர்கள். கொடியனாகிய எனக்கே மனமுருகிக் குழைகிற தெனின், மெய்யன்பராகிய வழியடியார்க்கு இன்னதாம் என்று சொல்லற் கரிதாம் என்பாராய், “பற்று இடையாது ஆங்கவர்கட் கிருந்தவண்ணம் தனையார் யார் பகர்வார்” எனக் கூறுகின்றார். இடைதல் - குறைதல். பழமை வலிமையைக் குறைக்குமென்பவாகலின், “பற்று இடையாது” எனப் பகர்கின்றார். தேவதேவ னொருவர்க்கே அதனையுரைத்தல் கூடும் என்றற்கும் “பகர்வாரேல் பகவன் நிகர்வார்” என மொழிகின்றார். பகவன் - தேவாதி தேவன்.

     இதனால், பழவடியார்களின் சிவானுபவம் தெரிவித்தவாறாம்.

     (7)